விளங்கும் நிலைகள் ஐந்து. அவை: அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் இவர்தம் நிலைகளாம். இவ் வேறுபாடுகள் அனைத்தும் நிலைவேறுபாடுகளே யன்றித் தலைமைப் பொருள் வேறுபாடுகளில்லை. இவை யனைத்தும் ஆதியாகிய திருவருளின்கண் அமைவன. இவ்வுண்மையினை உண்மையறிவில்லாத சில மூடர்கள் அறியார். முறைமைக்கண் ஒரு பொருளையே ஆண்டான், நெடுமால், அயன் என்று பேறுபடுத்திக் கூறுகின்றனர். அதற்கு மாறாக வெவ்வேறுளவென்று கூறுவது உண்மைக்கு மாறாகிய பிதற்றுரையே யன்றிப் பிறிதன்று. (அ.சி.) பேரொளி மூன்று - சத்தி - சிவம் - விந்து. பேரொளி விந்து - சதாசிவம் - ஈசன் - அரன் - அரி - அயன். (8) 59. பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாகி வரத்தினுள் மாயவ னாய்அய னாகித் தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக் கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. (ப. இ.) சிவபெருமான் கடந்த மேனிலையுள் ஒன்றேயாய் உள்ளும் புறம்புமாய் விரவி நின்றருள்வன். உயிர்கள் பிறப்பினுள் வருதலாகிய வரத்தின்கண் அயனாய் (காப்பின்கண்) மாயனாய் அம்முறைபோல் இன்னும் பலவாய்த் தோன்றியருள்வன். கரத்தலாகிய மறைப்பினுள் ஆண்டானாய் நின்று ஆருயிர்கட்கு வினைக்கழிவு செய்தருள்கின்றனன். (அ . சி.) வரத்து - படைப்பு. தரம் - முறை. கரத்து - அழித்தல்; மறைவு. (9) 60. தானொரு கூறு சதாசிவன் எம்இறை வானொரு கூறு மருவியும் அங்குளான் கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற தானொரு கூறு சலமய னாமே. (ப. இ.) சத்தியாகிய திருவருளாற்றலை ஒப்பில்லாத ஒரு கூற்றிலேயுடைய சிவபெருமான் சதாசிவன் எனப்படுவன். சத்தியோடு கூடிய சிவன் சதாசிவன். சதாசிவன் எனினும் அருளோன் எனினும் ஒன்றே. அவனே எம் கடவுள். அறிவுவெளியாகிய வனப்பாற்றலென்னும் பராசத்தியுடன் கூடியும் அங்குளன். அத் தலைவனுடன் கூடி ஒரு கூறாய் உயிர்க்குயிராய் உண்ணின்று உயிர்த்தலாகிய செலுத்தலைச் செய்வதும் திருவருளே. அத் திருவருள் குளிர்ச்சியாயிருத்தலின் அவனும் தண்ணளியன் ஆவன். (அ. சி.) வான் - பராசத்தி - பரை. கோன் - பதி. சலமயன் - தண்ணியன். (10)
|