26
 

3. வேதச் சிறப்பு

61. வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம்1 எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

(ப. இ.) 'உலகியல் வேதநூல் ஒழுக்கமாதலின்' அவ் வேதத்திற்கு அறநூல் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. செந்தமிழ்ப் பொது அறநூல் திருவள்ளுவநாயனார் அருளிய திருக்குறளாகும். அக் காரணம் பற்றியே அதற்குப் பொதுமறை என்னும் திருப்பெயரும் வழங்குவதாயிற்று. வீட்டியல் அறநூல் செந்தமிழ்ச் சிறப்புமறை. அதுவே திருநான்மறை முடிவாம் மூவர் தமிழ். எனவே அம் மறையினை விட்டு வேறாக அறவொழுக்கம் இல்லை. அம் மறையின்கண் ஓதத்தகுந்த அற இயல்புகள் அனைத்தும் உள. வீண் அளவை முறையான் வழக்கிடும் வல்லாண்மையை விட்டுத் திருவடியுணர்வு கைவந்த நுண்மதி வாய்ந்த நல்லார் எல்லா முறைவளமும் நிரம்பப் பெற்ற 'செந்தமிழ்த் திருநான்மறையினை இடையறாது இனிது ஓதித் திருவடிப் பேறாகிய வீடு பெற்றார்களே.

(அ. சி.) வேதம் - தமிழ் வேதம். ஓதத் தகும் அறம் - அறம், பொருள், இன்பம், வீடு.

(1)

62. வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்2
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள்3 காட்டவே.

(ப. இ.) உலகினைத் திருவாணை வழிநின்று படைக்கும் நான்முகனும் மறையினை உரைத்தருளியவன் ஆகான். அதனால் அவன் சிறப்பாக மறையினுக்கு உரியவனாகமாட்டான். சிறப்பாக வுரியவன் சிவபெருமானே. அம் மறையினை அருளிச் செய்தவன் 'மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்.' மறைவல்லார் சிவபெருமானை முழுமுதலாகக் கொண்டு மறைமுறைப்படி வேள்வி செய்து உய்வதற்காகவும் மெய்ப்பொருளாகிய திருவடி நிலையினைக் காட்டிக் காணும் அழியா நிலைமை பிறப்பித்தற்காகவும் மறையுரைத்தனன். மெய்ப்பொருள்: இறை, உயிர், தளை ஆகிய அழியா முப்பொருள். காட்ட - உணர்த்த.

(அ. சி.) வேதமுரைத்தானும் - தமிழ் வேதம் உரைத்தவனும். வேதியன் ஆகிலன் - பிரமா அல்லன். வேதமுரைத்தானும் வேதா - ஆரிய வேதம் உரைத்தவன் பிரமா.

(2)


1. ஆலின்கீழ். அப்பர், 4. 36 - 6.

" ஆலின்கீழ். 12. சம்பந்தர், 883.

2. ஆதி. 12. சம்பந்தர், 429.

3. வேதமுதல்வன். சம்பந்தர். 3. 54 - 8.