நிகழும். அம் மூன்றனுள் அறிவு இருந்த இடத்திலிருந்தே ஆற்றலையும் அன்பையும் தூண்டித் தொழிற்படுத்தும். ஆற்றல் அவ் வறிவின் வழியே சுற்றித்திரிந்து போற்றிக் காக்கும். அன்பு காக்கப்படும் பொருளின்மாட்டு அன்பினை விளைவித்து மேன்மேலும் உறுதியுடன் காக்குமாறு அவ்வறிவு ஆற்றல்களை இடையறாது தூண்டும். அதனால் காவல் அன்பின் காவலென்றே அறையப்படும். இம் முத்திறக் காவலின் முறைமை விளங்கும் சேக்கிழாரடிகளின் அருண்மொழி வருமாறு: "அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரையிருள் திரியும் மஞ்சு நீள்வது போலுமா மேனி மலர்ப்ப தங்களில் வண்சிலம் பொலிப்ப நஞ்சு பில்கெயிற் றரவவெற் றரையின் நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை வஞ்ச லின்றிமுன் றிரியவுங் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும்." 12. திருக்குறிப்பு - 81. சிவய நம' என்ற நிலையில் 'ய'கரமாகிய உயிர் 'வ'கரமாகிய திருவருளினையே நோக்கும். என்னை, வகரம் யகரத்திற்கு வலப்பால் இருப்பதால் என்க. நோக்குதலென்பது அதன் அரும்பெரும் உதவியை விரும்பி நாடுதல். 'நமசிவய' என்றிருந்தால் யகரம் ஈற்றில் நிற்பதாகின்றது. நடுவிலிருந்தாற்றான் நாட்டமுண்டாகும். அதன்பொருட்டு அம் மறையினை 'நமயசிவ' என அமைத்தல்வேண்டும். அப்பொழுது 'ய'கரமாகிய அவ்வாருயிர் தனக்கு வலப்பாலிருக்கும் 'ம'கரமாகிய உலகினை நாடும். இது பிறப்பியல் வாழ்வு. 'சிவய நம' என்பது சிறப்பியல் வாழ்வு. உயிர்விடும் போது 'சிவய நம' என்னும் சிறப்பியல் வாழ்வு மறையினை வழுத்துதல் வேண்டும். ஆனை : ஆன் + ஐ - ஆன் - உயிர்; ஐ - தலைவன் : ஆருயிர்கட்குத் தலைவன். ஆனை: அறிவு. பிள்ளை: ஆற்றல். வேலவன்: அன்பு. (அ. சி.) விடு.....போது - சாகும்போது. (9) 2073. இன்புறு வீர்அறிந் தேயெம் இறைவனை அன்புறு வீர்தவஞ் செய்யுமெய்ஞ் ஞானத்துப் பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று துன்புறு பாசத் துழைத்தொழிந் 1தீரன்றே. (ப. இ.) 'திருநாமம். அஞ்செழுத்தும் செப்பாத தீமையினால் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்க' நேரிடுகின்றது. அத்தகைய பிறவித்தொழிலிலேயே நின்று பிறப்புத் துன்பத்தை மிகுவிக்கும் பாசப்பற்றாகிய ஆக்கைக்கே இத்தனைகாலமும் உழைத்து இளைத்துக் களைத்தொழிந்தவர்களேகேண்மின்: எம் இறைவனாகிய முழுமுதற் சிவபெருமானை அவனருளால் அறிந்தே இன்புறுங்கள். அவன் திருவடிக்கண்ணே இறவாத இன்ப அன்பு வேண்டிக் காதல் செய்யுங்கள். சிவத்தைப் பேணுதலாகிய தவத்தைப் புரியுங்கள். அதற்குரிய திருவடியுணர்வுப் பண்புகளைப் பெறுவீராவீர்.
1.கேட்டலுடன். சிவஞானசித்தியார், 8. 2 - 14.
|