2093. நாக முடலுரி போலுநல் லண்டச மாக நனாவிற் கனாமறந் தல்லது போகலு மாகும் அரனரு ளாலேசென் றேகு மிடஞ்சென் றிருபயன் 1உண்ணுமே. (ப. இ.) ஆருயிர் ஓர் உடம்பைவிட்டு மற்றோர் பரு உடம்பை வினைக்கீடாக எடுக்கும். அதற்கிடையில் இருவினைப் பயனுள் தீவினைப் பயனின் ஒரு பகுதியை விண்ணுலகில் நுகரும். என்னை, அவ்வுயிர்கள் ஆண்டு நுகருங்கால் தாம் செய்த வினைவகையும், அதன் பயனை அவ்வவ்வாறே இப்பொழுது அடைகின்றோம் என்னும் நினைவும், அதனை எடுத்துரைத்து அழுத்துவிக்கும் ஞமனாரின் ஏவலாளர் செய்கையும் எண்ணி எண்ணித் துன்புறுவராகலானென்க. இதுபோல் நல்வினைப் பயனுக்கும் உண்டோ என்பது உரையளவையாற் றுணிய முடியவில்லை. வழியளவையான் நோக்குங்கால் இன்பப்பயன் நுகரும் தேவர்கள் செருக்குறுதலானும் அவர்கள் தம் முன்னிலையை அறிவுறுத்துவார் உளரெனக் கேட்கப் படாமையானும், அவர்களும் தங்களை மறந்து 'சாவமுன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்றும் நஞ்சம் அஞ்சியும்' முறையிடுதலானும் அவர்களுக்கு உணர்த்துவாரும் ஊட்டுவாரும் ஆங்கு இலரென்பதே துணிபு. இஃது உலகில் தீவினை இயற்றிச் சிறைக்கோட்டம் புகுவார்க்கே உணர்த்துவாரும் ஊட்டுவாரும் காணப்படுகின்றமையான் உணரலாம். இவ்வுண்மை வரும் சிவஞானசித்தியார் திருப்பாட்டானும் உணரலாம்: "அரசனும் செய்வ தீச னருள்வழி யரும்பா வங்கள் தரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத்து உரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர் நிரயமுஞ் சேரார் அந்த நிரயமுன் னீர்மை யீதாம்." சித்தியார், 2. 2 - 29. மீண்டு நிலவுலகத்துப் பிறக்கும்போது அவ்வுயிர்கள் இவற்றை மறந்துவிடுகின்றன. பருவுடம்பைவிட்டுப் போவதற்கு ஒப்பு, பாம்பு தோலைக்கழற்றிப் புதுத்தோலை எடுப்பதாகும். இடவேறுபாட்டிற்கு முட்டையகத்துக் குஞ்சு முதற்கண் முட்டையைவிட்டு வெளிவந்து கூட்டில் சின்னாட்கள் தங்கும்; பின்பு பறந்து புறத்துப்போகும்; இஃதொப்பாகும். அறிவு வேறுபாட்டிற்கு நனவின்கண் நினைவோடியற்றிய செயல்கள் எல்லாவற்றையும் கனவில் மறந்துவிடுவது ஒப்பாகும். அரனருளாலே ஆருயிர்கள் இம்முறையாகப் பாம்பு தோலுரிப்பதும், முட்டையிலிருந்து குஞ்சு வெயிப்படுவதும், நனவை மறந்து கனவிற்செல்லுவதும் போற்சென்று ஆண்டுப்பயன் உழந்து மீண்டு பிறக்கும். உழத்தல் - அனுபவித்தல். (அ. சி.) அண்டசம் - முட்டையில் பிறப்பன. இரு பயன் - புண்ணிய பாவப் பயன். (11)
1.அரவுதன். சிவஞானபோதம், 2.3-2. " நாள்நாள் . . . . விடைகொண்டு மெய்கண்டநூல், போற்றிப் பஃறொடை, வரி 40 - 4.
|