891
 

பிறந்து இறந்து வரும்நிலையாத் தன்மை முன்னில்லாத நிலைப்பினன். இறுப்பு முதலிய குணங்களுடனும் முன்கூடாதவன். இறுப்பு - புத்தி. அதனால் எச் செயலும் முன்னில்லாதவன். நுகர்வு முன்னில்லாதவன். தினக்கற்ற - தினங்கற்ற என்பது தின்னக்கற்ற என்பதன் மரூஉவாகும்; ஆணவத்துள் மறைந்திருப்பவன். கிறியன் - படிறன்; வஞ்சகன்; மறைந்திருப்போன். இந் நிலையே புலம்புநிலையாகும். இத் திருப்பாட்டின் விளக்கம்போன்று வரும் சிவஞானசித்தியாரின் திருப்பாட்டு வருமாறு :

"அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன் கலாதி யோடுஞ் சேர்விலன் செயல்க ளில்லான்
குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான்
பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகே வலத்தில் ஆன்மா."

(சிவஞானசித்தியார், 4. 3 - 7.)

(அ. சி.) அராகாதி - அராகம் முதலியன. கலாதி - கலை முதலியன. கிறியன் - வஞ்சகன்.

(22)

2209. விந்தவும் மாயையும் மேவுங் கிரியையுஞ்
சந்தத ஞான பரையுந் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.

(ப. இ.) விந்துவாகிய தூமாயையும், மாயையாகிய தூவாமாயையும் என்றும் பேரறிவாய்த் திகழும் வனப்பாற்றலாகிய பரையும் ஆருயிர்கட்கு அவரவர் செவ்விக்கேற்ப உயிர்நிலையாகிய உடம்பாய் அமையும். ஒரு மலக்கட்டுடையார்க்கும் இருமலக்கட்டுடையார்க்கும், அமையும் உடம்பு தூமாயையினின்று தோன்றுவன. திருவடியுணர்வு கைவரப்பெற்றவர்க்குத் திருவருளினின்றுந் தோன்றுவன. மும்மலக்கட்டுடையார்க்கு உடம்பு தூவாமாயையினின்றுந் தோன்றுவன. செயல்களும் அவ்வம் மாயை களிலேயே நிகழும். மும்மலக்கட்டுடையார் வாழ்வது இவ்வுலகத்தேயாம். ஈண்டுப் பரை என்பது ஏற்புழிக்கோடலால் நடப்பாற்றலின் மேற்று.

(23)

2210. கேவல மாதியிற் பேதங் கிளக்குறிற்
கேவல மூன்றுங் கிளருஞ் சகலத்துள்
ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே
ஓவலில் லாவொன்பா னுற்றுணர் வோர்கட்கே.

(ப. இ.) புலம்பாகிய கேவலமும், புணர்வாகிய சகலமும், புரிவாகிய சுத்தமும் கேவலாதிகள் என்று ஓதப்பட்டன. இவற்றின் வேறுபாடுகளைக் கூறுமிடத்து ஒவ்வொன்றும் முத்திறப்படும். அவை வருமாறு: புலம்பிற் புலம்பு, புலம்பிற் புணர்வு, புலம்பிற் புரிவு என மூன்று. புணர்விற் புணர்வு, புணர்விற் புலம்பு, புணர்விற் புரிவு என மூன்று. புரிவிற் புணர்வு, புரிவிற் புலம்பு, புரிவிற் புரிவு என மூன்று ஆக ஒன்பது வகைப்படும். இவற்றை முறையே கேவல கேவலம், கேவல சகலம், கேவல சுத்தம் எனவும், சகல சகலம், சகல கேவலம், சகல சுத்தம் எனவும், சுத்த சுத்தம், சுத்த கேவலம், சுத்த சகலம் எனவும்