2299. எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின் எய்தினர் செய்யும் இருஞான சத்தியின் எய்தினர் செய்யும் இருஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறையருள் தானே. (ப. இ.) ஆருயிர்கள் தூமாயை தூவாமாயை என்னும் இருமாயைகளிலும் அருளால் பொருந்திச் செய்வன செய்யும் அதுபோல் பெரிய ஞானசத்தியினைப் பொருந்தி அறிவிளங்கப் பெரும். பெரிய நிலவுலகமுதலாம் மூலப்பகுதியினைப் பொருந்திக் துய்ப்பன துய்க்கும். இவையனைத்தும் திருவருளால் நிகழ்வனவாகும். எய்தினர்: முற்றெச்சம். (அ. சி.) இரு மாயா சத்தி - சுத்த மாயை. அசுத்த மாயை. ஞால சத்தி - பிரகிருதி மாயை. (35) 2300. திருந்தனர் விட்டார் திருவி னரகந் திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கந் திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டந் திருந்தனர் விட்டார் சிவமா 1யவமே. (ப. இ.) திருவடியுணர்வால் திருத்தமுற்றவர் இன்பமில்லாத துன்ப நிறைந்த இருளுலகம் புகார். திருவடியுணர்வு - மெய்யுணர்வு; சிவஞானம். அத்தகைய உணர்வுடையார் நிலையிலா இன்பம் எய்தும் துறக்க வுலகத்தையும் கான்றசோறென ஒதுக்கித் தள்ளினர். அவர்கள் ஐம்மலக் கூட்டத்தையும் அறவேவிட்டனர். மேலும் சிவமாய்த் திகழ்ந்தனர். அதனால் அவமாய பிறப்பினை விட்டனர். இவர்களே தங்கருமம் செய்யும் தவத் தோராவர். ஏனையார் சிறப்பில்லாத பிறப்புவினை செய்யும் அவத்தராவர். (அ. சி.) திருந்தனர் - தத்துவ ஞானம் கை வந்தவர். (36) 2301. அவமுஞ் சிவமம் அறியார் அறியார் அவமுஞ் சிவமும் அறிவார் அறிவார் அவமுஞ் சிவமும் அருளால் அறிந்தால் அவமுஞ் சிவமும் அவனரு 2ளாமே. (ப. இ.) அவமாகிய பிறப்பினுக்கு ஏதுவாம் யான் எனது என்னும் செருக்குடன் செய்யும் பிணிச்செயலையும், சிவமாகிய சிறப்பினுக்கு ஏதுவாம் உருக்கமுடன் செய்யும் பணிச்செயலையும் அருளால் அறியாரே அறியாதவராவர். அவம் - பிறப்பு. சிவம் - சிறப்பு. இவ் வுண்மை வரும் திருவள்ளுவ நாயனார் திருமாமறையா னுணரலாம்: "அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். " (திருக்குறள், 427.) 1. அண்டர். அப்பர், 5. 39 - 3. " கொள்ளேன். 8. திருச்சதகம், 2. 2. தவஞ்செய்வார். திருக்குறள், 266.
|