நிற்பன். முயன்றுதொழில் செய்துவளர்த்தவன், தந்தை முந்திவந்தணுக மைந்துடன் நிற்பன். வந்த தந்தையும் மனமகிழ்ந்து பாராட்டித் தன்னுடன் அணைத்துக்கொள்வன். அளவறிந்து வாழவேண்டுமென்பதே திருவள்ளுவநாயனார் அருளிய பொதுமறை; அதுவருமாறு: "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். (479) நம்முடைய உயிர்ப்பு ஓய்வின்றி விடுத்தல் பதினாறு விரலளவும் செல்கின்றது. அதனை அவ்வளவில் எடுக்காமல் நான்கு விரலளவை வெளியில் வீணாக்கி விட்டுவிட்டுப் பன்னிரண்டு விரலளவே பற்றிக் கொள்கின்றோம். இங்ஙனம் செல்லும் நான்கு விலளவையையும் வீணாக்காமல் அப்படியே முற்றாக எடுத்தல் வேண்டும். முற்றாக எடுத்து விட்டால் செலவில்லையேயன்றி வளர்ச்சியுண்டாகாது. வளரவேண்டுமாயின் அவ்வுயிர்ப்பினைத் தடுத்தலாகிய கும்பகம் செய்தல்வேண்டும். இப்பயிற்சியை இறைப்பொழுதாய்க் கண்ணிமைப்பொழுதாய், நாழிகையாய், நாளாய், திங்களாய், ஆண்டாய், ஊழியாய்ப் புரிந்து வளர்தல் வேண்டும். புலி வீணாய் ஆசைப்பட்டு உணவினைத் தொகுக்கப் பாய்வதும், அரிமா ஆசைப்படாது வேண்டும் வேளை பசிக்கு உண்டு அடங்குவதும் கண்கூடு ஆசையை வென்றானைச் சிங்கம் என்பது மரபு. எனவே அரிமா யோகநிலை எல்லையாகும். ஆனேறு ஞானநிலையாகும். ஒரு நூற்கயிற்றுச் சுருளினைப் பதினாறு விரலளவு வெளிவிட்டுப் பன்னிரண்டு விரலளவு உள்ளிழுத்தால் நான்குவிரல் வெட்டப்பட்டுப் போகின்றது. அங்ஙனமே போய்க்கொணடிருந்தால் நாளடைவில் அச் சுருள் ஒன்றுமில்லாது போய்விடுமன்றோ? அங்ஙனமின்றி நான்குவிரலளவையும் உள்ளே கூட்டிக்கொண்டால் நம்முடன் ஒன்றாய் வேறாய் உடனாய் ஒதுங்கியிருக்கும் தண்கடலனைய திருவடிப்பேரின்பப் பெருங்கடல் நம்மாட்டு மேலோங்கி நிறைந்து கசிந்து எங்கணும் உலவும். இஃது அளவின்றி ஊறும் கிணற்றுநீர் மண் முதலியவற்றால் மூடப்பட்டு மறைந்து இல்லையெனும்படி சொல்லிறந்து கிடக்கும். உரனுடை நல்லாரிணக்கத்தால் அம்மூடிய மண் முதலியவற்றை அகற்றிவிட்டால் அவ்வூற்றுப் பெருக்கெடுத்து எங்கணும் பாய்வதனையொக்கும். மதுக்களி மிக்க தேன்நிறை அழிவிலாக் காழில் கனியாகிய நிறைந்த துன்பில் இன்பமிழ்து. நுகர நுகரப் பெருகி ஊறும். அங்ஙனம் ஊறலால் முன் நம்மைப் பொசுங்கும்படி வருத்திய ஐம்புலன்களை இன்று நாம் பொசுங்கும்படி வளைத்து வெல்வோம். இதுவே "நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றானை" யென்னும் மெய்ம்மறையினை ஐயமில் உய்யும் குறிப்பாகும். புலன் வென்றான் அன்றாலின் கீழிருந்து அறஞ்சொன்னான்; அதூஉம் நால்வர்க்கெனவும் நவில்ப. நால்வர் நாற்பொருளாளர். நானெறியாளர் எனவும் கூறுப உண்மையான் நோக்குவார்க்கு எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் நாற்பாலாரேயாவர். எனவே அறம் சொல்லுதல் பிறர்க்கன்று நமக்கேயாம். பிறர்க்கு நடைமுறையில் நடந்து திடம்பெறக் காட்டல் நன்றாம். இதனை வரும் வெண்பாவால் நினைவுகூர்க. "ஆலாம் அடிநினைவு அந்நால்வர் உட்கரணம் மேலாம் அறமவர்க்கே மேவுவித்தல் - நூலாம் அடையாளத் தன்கைபோன் றாண்டாண்டுள் ளார்க்கு நடையாலே தாம்காட்டல் நன்று."
|