15
 

33. பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்1
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

(ப. இ.) வேற்றுப் புலத்தார் தெய்வங்களைத் தெளிவுணர்வின்மையால் பலவாகக் கொண்டு வழிபடுவர். இது தொடக்க காலத்து உலக மக்களின் செய்கை. வேள்வியென்னும் பெயரான் கொன்றாகும் கடைச்செயல் பலவும் புரிவர். அதற்குக் காரணம், அவர்கட்குப் பெறவேண்டிய மெய்யுணர்வு சிறிதும் இல்லாமையேயாம். முழுமுதற் சிவனையொழித்து, ஏனைய உயிரினங்களாகிய தேவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடுவர். அப்பாட்டுப் பாடுவாரும் தெய்வவுணர்விலாதவராவர். அதனால் அவர்கட்குப் பிறப்பு இறப்பு நீங்காமையால் துன்புற்று உள்ளம் வாடுவர். விதி: ஆகுபெயராய் வேள்வியைக் குறித்தது. ஒன்றும் - சிறிதும்.

(அ. சி.) பதி பலவாவது - பல தேயங்களை உடையது. விதிபல செய்து - ஆரிய வேதங்களில் சொல்லப்பட்ட புன்னெறி யாகத்தைச் செய்து. துதிபல தோத்திரம் சொல்ல வல்லார் - முதல்வனைத் தவிர்த்துப் பல தேவர்களை வணங்கித் துதிப்பவர்.

(33)

34. சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

(ப. இ.) கலவை மணக் கூட்டுப் பூசப்பெற்ற தலையினிடமாக இருந்துவரும் நறுமணம் போன்று வேந்தனாகிய சிவபெருமான், தூய விண்ணவர்க்கருளிய மெய்ந்நெறி ஒன்றுண்டு. அச் சிவபெருமான்றன் நிறைந்த அறிவொளிப் பொருண்மறையான திருவைந்தெழுத்தை அளவின்றித் திருக்கோவில் முதலிய புறம்போந்தும், திருமடம் முதலிய அகமிருந்தும் போற்றிப் புகழ்ந்து புகல்கின்றேன். தூயவிண் - சிவவுலகம்.

(அ. சி.) சாந்து - கலவைச் சாந்து. கவுரி - உமையம்மையார். வேந்தன் - இறைவன்; மருதநிலத் தெய்வம்; முதல்வன்.

(34)

35. ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி யாட்டவு மாமே.

(ப. இ.) முழுமுதற் சிவன் அருளால் ஆருயிர் உய்யத் தானே வகுத்த மெய்ந்நெறி சன்மார்க்கம் எனப்படும். அதுவே எவராலும் ஆற்றமுடியா அரும்பெரும் வழியாகும். அம் மெய்ந்நெறியே செந்நெறி எனவும் நன்னெறி எனவும் கூறப்படும். அந் நெறி நின்று பேரன்புடன் திருவைந்தெழுத்தோதிப்


1. எரிப்பெருக்குவர். அப்பர், 5. 100-7.