83. மறையோ ரவரே மறையவ ரானால் மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று அறிவோர் மறைதெரிந் தந்தண ராமே. (ப. இ.) சிவமறையின் மெய்ப்பொருளைச் சிவகுருவால் உணரும் அவரே சிவமறையவர். ஆனால் அவர்கட்குரிய மறைமுடிவால் பெறப்படும் வாய்மை தூய்மை இவற்றில் குறைவுடையோர் செய்யும் புறச் செயல்களனைத்தும் பிறர் மெச்சச் செய்யும் ஆகுல நீர என்று மெய்யறிவுடையோர் கூறுவர். அங்ஙனம் அஞ்சாது கூறும் வஞ்ச நெஞ்சமிலாரே சிவமறை தெரிந்த சிவ அந்தணராவர். குறையோர் என்பதற்கு அயன்மொழி நூல் வழி யொழுகுவோர் என்றலும் ஒன்று. கோலாகலம் - சந்தை கூட்டிரைச்சல்; ஆகுலம். (9) 84. அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்1 சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி நந்துதல் இல்லை நரபதி நன்றாகும் அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. (ப. இ.) சிவ வழிபாடு செய்யும் செந்நெறியினர் இயற்கை அந்தண்மையுடையோராவர். 'வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்' என்பதனாலும், 'சிவாகமங்கள் சித்தாந்தமாகும்' என்பதனாலும் அருமறையந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் ஆகமத்தராவர். அத்தகையோர் சிவனை மறவாத் திருவுடை நல்லோராவர். நல்லோர் - சிவஞானி. அத்தகையோர் சேரும் புண்ணியத் தென்புலம் எவ்வாற்றானும் கேடெய்துதல் இல்லை. மாந்தர் ஆட்சித் தலைவனாம் வேந்தனும் செந்நெறியொழுகி நன்றாகுவன். அந்தியும் சந்தியுமாகிய சிவவழிபாட்டுக் காலங்களில் தவறாது வழிபாடு புரிதலாகிய ஆகுதியினை அந்தணர் செய்வர். ஆகுதி - தூய ஆன்பால். (10)
1. (பாடம்) அறவேள் ஆகமத்துச்
|