(ப. இ.) வீடுபேறாய், திருவடியுணர்வாய், அவ் வுணர்வினைப் பயக்கும் முத்தமிழ் மறையாய்த் திகழ்பவன் சிவபெருமான். அவனே அறிவுப் பெருந்திருவுடைய ஆண்டவன் ஆவன். அவனை நல்லார் அளவில் காலம் அகங்குழைந்து முகமலர்ந்து திருமுறை புகன்று திருவருளால் தொழுவர். அங்ஙனம் தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் ஆதலின், அவர்பால் தயிரின்கண் நெய்போலவும், மலரின்கண் மணம் போலவும் விளங்கித் தோன்றுவன். அத்தகைய பேரொளிப்பிழம்பை முற்றவம் இன்மையால் சிலர் விரும்பார். அங்ஙனம் விரும்பாதார்மாட்டும் சிவபெருமான் உளன். அங்கு அவன் பாலினிடத்து நெய்போலவும், முகையினிடத்து மணம்போலவும் மறைந்துநிற்பன். நெய் - வெண்ணெய். முத்தமிழோசை-முத்தமிழ மறை. அருளோன் மெய்யாகிய சதாசிவ தத்துவமே ஓசை உருவாய் வெளிப்படுதற்குரிய முதலிடம். அம் மெய்யின்கணிருந்து முத்தமிழ் வந்தது என்பது 'சதாசிவ தத்துவம் முத்தமிழ் வேதம்' (149) என்பதனால் நன்கு பெறப்படும். முத்தமிழ் இயல், இசை, இன்பக்கூத்து. அருளோனாகிய சதாசிவன் உண்ணின்றுணர்த்தும் ஓசை முதல்வன். இயல், இசை, இன்பக்கூத்து ஆகிய மூன்றும் வசையிலா அறம் பொருள் இன்பம் மூன்றினையும் வரையறுக்கும் நூற்புணர்ப்பாகும். அவை முறையே திருவள்ளுவநாயனார் அருளிச்செய்த திருக்குறள் அறத்தின் பகுதியாகும். நால்வர் அருளிய தேவார திருவாசகம் பொருளின் பகுதியாகும். திருச்சிற்றம்பலக்கோவையார் இன்பப்பகுதியாகும். இவையே செந்தமிழர் அந்தமில் திருமறை. இவையனைத்தையும் கைவிட்டு மருள்கொண்ட மனத்தராய் மாற்றார் மறையினைப் போற்றிப் புகழ்ந்து திரிவர் சிலர். அவர்களேனும் அம் மறையினைக் கற்றுணர்ந்தவர்களா? என்றால், அதுவும் இன்று. 'இருபிறப்பும் வெறுவியராய்' இந்நாள் வருபவர் இவரன்றோ! இவ் வுண்மையினை ஒரு வெண்பாவில் தருகின்றாம் : "ஆன்றவரு ளோன்மெய் அறிமுத் தமிழ்வேதம் சான்றதிரு வள்ளுவனார் சார்நால்வர்-ஏன்ற இயலிசைகூத் தீண்டறம் ஏர்பொருள்நற் கோவை மயலிலாக் கூத்தின்பாம் மற்று." அருளோன் மெய்-சதாசிவ தத்துவம். இயல்: அறம், இசை:பொருள். கூத்து:நல்லின்பம். ஈண்டு 'முத்தமிழ்' என்னும் மொழி மிகப்பெரும் செந்தமிழ் நிலத்தொடு பொருந்திய பழையவழக்காதல் கண்டு இன்புறுக. விழுமிய முழுமுதற் சிவபெருமான் முத்தமிழோசை வடிவினனாய் இயற்கை அன்பறிவாற்றலனாய்த் திகழ்கின்றனன். இவ் வுண்மை 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்னும் அப்பரடிகளாரின் அருண்மொழியானும் நன்குணரலாம். மேலும் ஓசை தோன்றுவது நாத மெய்யினின்று, இயற்கையாகத் தோன்றுவது ஒண்மைமிக்க ஓங்காரமாகும். ஓ என்பது பெரும்பாலும் நம் செவிவடிவை யொத்திருக்கிறது. (அ. சி.) முத்தியை - முத்தி கொடுப்பவனை. ஞானத்தை - ஞானமயம் ஆனவனை. முத்தமிழ் ஓசையை - முத்தமிழ் வேத ஒலியைக் கேட்டுக் கொண்டிருப்பவனை. Vide "சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்" (திருமூலர்). நெய்த்தலைபால் - பால் தலை நெய் என்று கொள்ளவும். (13)
|