என்பன இவ் வெழுத்துக்களால் தோன்றும் சிவபெருமானின் திருத்தோற்றம் முதல் திருவுருவத் தோற்றமாகும். அதுவே ஆதியாம் திருவுரு அதுவே ஐந்தொழில் திருவுரு. அது தூக்கால் மணிவயிறு தோள்முகம் முடி ஐந்தும் முறையே 'நமசிவய' என்ப. துடிவலக்கை, வீசிடக்கை, மகிழ்வலக்கை, மழுவிடக்கை, துதைவலக்கால் ஐந்தும் முறையே 'சிவயநம' என்ப. இத் திருக்கோலத்துடன் சிவபெருமான் எழுந்தருளிவந்து தன் திருவடித்தேனை அருள்செய்வன். இந் நிலை அப்பால்நனவு எனக் கூறப்படும். இந் நிலையில் ஆருயிர்கள் உடல் கலன் முதலிய கருவிகளை முறையாகவிட்டகலும். அகலவே ஆங்கு அருளால் தோன்றுவது 'ஆன அமலாதீதம்' என்னும் பிணிப்பிலா அப்பால் மணிநிலையானது கைகூடும். அதுவே அம் முழுமுதற் சிவபெருமானார் தன்மையை அளித்தருள்வதாகும். சிவபெருமான் தேனாகவும் சிவப்பெருமாட்டி பாலமிழ்தாகவும் நம்பால் உறைவர். தேன் அறிவாகவும், பால் ஆற்றலாகவும், உறைவு அன்பாகவும் கொள்க. 'நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன், தேனாயின்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்' என்னும் செந்தமிழ் மறை முடிபின்கண் 'தேன் அமிழ்து தித்தித்தல்' மூன்றும் ஓதப்பெற்றுள்ளன. இம் மூன்றும் முறையே அறிவு ஆற்றல் அன்பு என்னும் மூன்றுமாகும். தித்தித்தல் - தித்திப்பை ஊட்டுதல். இதுவே 'மேல் உறைவர்' எனக் கூறப்பட்டது. திருவைந்தெழுத்தே சிவபெருமானுக்குரிய சிறந்த முதல் திருவுரு என்பதை வரும் தமிழாகம உண்மை விளக்கத் திருவெண்பாவால் உணர்க: "ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியி லேநகரம்-கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகரும்முகம் வாமுடியப் பார்." - 32 "சேர்க்கும் துடிசிகரம் சிக்கெனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம்-பார்க்கிலிறைக்கு அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கு மகரமது தான்." - 33 இத் திருவைந்தெழுத்தைத் தாங்கிக்கொண்டிருப்பது செந்தமிழ் ஓங்காரம். இஃது இலை பூவினைத் தாங்குவதுபோன்றாகும். பூப் பூப்பதற்கு முதற்காரணமாக இருப்பதும் அவ் விலையே. பூத்தபின் தாங்கும் துணைக்காரணமாக நிற்பதும் அவ் விலையேயாம். அம் முறையில் வருவன ஓங்காரமுமாம். இவ் ஓங்காரம் திருவைந்தெழுத்தைத் தாங்கிக்கொண்டு வேறற நிற்பதால் திருவைந்தெழுத்துக் கணிப்பார்க்கு ஓங்காரம் வேண்டுவதின்றென்ப. அவ் வுண்மை வருமாறு: "ஓங்கார மேநற் றிருவாசி உற்றதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம்-ஆங்காரம் அற்றார் அறிவரணி அம்பலத்தான் ஆடலிது பெற்றார் பிறப்பற்றார் பின்." - 34 (அ. சி.) உருநந்தி - வடிவுடை சிவன். நனாவத்தை - நனவு. அடைத்தாய் - முறையாய் அமலா அதீதம் - சத்த துரிய அதீதம். (7)
|