13. அருளல் 426. எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. (ப. இ.) எண்புலமாகிய எட்டுத் திசைகளிலும் ஆருயிர்கட்கு இன்பம் எய்துதற்பொருட்டு வழங்குவது வளி. அவ்வளியே காற்றெனப்படும். அது வீசும் காற்றென ஓதப்பெற்றது. உலகை வட்டமாக ஆடைபோல் சூழ்ந்திருக்கும் கடல் ஈண்டு வட்டத்திரை எனப்பட்டது. திரை சினையாகு பெயராகக் கடலைக் குறிக்கும். அஃது ஈண்டு நீர் என்னும் பொதுமையைக் குறிப்பதாகும். அனல் - தீ. மாநிலம் - பெரிய நிலம். ஆகாயம் - விசும்பு. எனவே, காற்று, நீர், தீ, நிலம், வானம் என்னும் ஐம்பெரும் பூதக் கூட்டரவால் ஆயது உயிர் நிலை. இதனைக் காயப்பை என்ப. ஆருயிர்கட்கு வினைக்கீடாக இவ்வுடல்களைப் படைத்தளித்து அருளால் கட்டிப் பிணைத்து அமைப்பவன் சிவபெருமான். இருவினையொப்பு உற்ற காலத்து அப் பெரும் கட்டினை அவிழ்த்தருள்பவனும் அவனே. அவன் அருள் வடிவாம் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் என்க. ஒட்டு - திருவடிப்பேறு. (அ. சி.) வட்டத்திரை - கடல். (1) 427. உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே சமைக்கவல் லானே.1 (ப. இ.) அருஞ்சைவர் மெய் முப்பத்தாறனுள் முடிந்த முடிபாக விளங்கும் முப்பத்தாறாம் மெய் ஒலி என்ப. அஃது ஒளிவண்ணமாக விருக்கும் அது மெய்களின் உச்சியில் சிறந்திருக்கும். உச்சி - அந்தம். மெய் - தத்துவம். ஒலி - நாதம். அவ் வொளிவண்ணமாம் ஒலியினை நேரே இயக்கும் சிவபெருமானை முழுவிருப்பத்துடன் வழிபட்டு இன்பங்கொள்வார்க்கு வரும் பிறப்பில்லை அதனால் அவர்தம் இறப்புக் காலத்தும் கூற்றுவனுக்கு அவர்பால் வேலையில்லை. இவ்வுண்மை வரும் திருநாவுக்கரசர் திருமறைத் திருப்பாட்டானுணர்க: இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய மன்னன் பாத மனத்துடன் ஏத்துவார் மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னில் ஒன்றுவல் லாரையுஞ் சாரலே. - 5. 92 - 9. அஞ்செழுத்தாகிய மந்திரம் தன்னிலொன்று, என்பதற்கு நமசிவய, சிவயநம, சிவயசிவ, சிவசிவ என்னும் வகை நான்கில் ஏதாவது ஒன்று
1. சென்றுருளும். அப்பர், 6. 14 - 9. " நலமலி. அப்பர், 4. 14 - 8.
|