யாகும். அதுவே அருளோன்; அதுவே சதாசிவன்; அதுவே சிவக்கொழுந்து. இவ்வுண்மை யுணர்ந்தவர் அது, இது என்று வேற்றுமைப்படக் கூறார். அங்ஙனமன்றி வேற்றுமைப்படக் கூறுவோர் உண்மை உணரும் நினைப்பிலராவர். அருளால் அகம் புறம் தூய்மை யானோர் உண்மையான முதன்மை மூலத்தை யுணர்ந்தவராவர். அகந்தூய்மை திருவைந்தெழுத்தாலும் புறந்தூய்மை திருவெண்ணீற்றாலும் அமைவன. அது இது: அதுவும் இதுவும் என வேறுபாடும், அதுவே இது என ஒற்றுமையும், அதுவாகிய இது என ஒற்றுமை வேற்றுமை ஆகிய இருமையும் குறியாமல் விளங்கும் பொதுமைப் புணர்ப்பு. (அ. சி.) ஈசன் - மகேசன். இருவினை - கன்மம் - மாயை. பீசம் தாமரை மொக்கு (அருவுரு). தூசு பிடித்தவர் - தூய்மையாளர். (3) 54. சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த1 அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. (ப. இ.) அத்தன், அன்னை, ஓசை, ஒளி (சிவன், சத்தி, நாதம், விந்து) ஆகிய அருவம் நான்கும் சிவன் முதல் மூவர். அருளோன் (சதாசிவன்) அருவுருவம் ஒன்று. ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் நால்வரும் உருவத்தர். இவையெல்லாம் எண்ணுங்கால் ஒன்பது என்னும் எண்ணிலடங்கும். அதுவே ஆறு, இரண்டு, ஒன்று. இவை ஒன்பதும் நிலையால் வேறுபட்டதல்லாமல் பொருளால் ஒன்றே. அவற்றுள் விந்துவும் நாதமும் சிறப்புள்ளனவாகும். இக் குழுவினுக்கு முதன்மை சங்கரன்; அப்பெயரே சிறந்த பெயர். (அ. சி.) சிவன்...ஐவர் - சிவம் - சத்தி - விந்து - நாதம் - சதாசிவம் - மகேசன் - உருத்திரன் - மால் - அயன். சிவன் முதல் மூவர் - 4 + ஐவர் 5 ஆக 9. அவை ... ஆகும் - அவை ஒன்பதும் தோற்றத்தில் ஒன்றாகும். ஆறு + இரண்டு + ஒன்று - 9. (4) 55. பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில் அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம் வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே. (ப. இ.) மேலோதிய முறையின் உண்மைப் பயனை அறிந்து எண்ணுமிடத்து, அயனுடன் மாலும் நாம் தொழும் தன்மையரேயன்றி நமக்கு வேறானவராகார். ஆனால் இவ்வயனும் மாலும் முதற்கண் சிவனே. பின்பு அவனருள் பெற்று முப்பத்திரண்டாம் நிலையாகிய ஆசான் (சுத்த வித்தை) மெய்க்கண் உறையும் வழிப்பேற்றுயிரினத்தவரேயாவர். இவர்களே இருபத்து நான்காம் தத்துவத்தில் உறைகின்ற கட்டுயிராகிய மும்மலத்தயன் மால் இருவரையுந் தொழிற்படுத்தும் முதன்மையினை அருள் ஆணையால் பெற்றவர். கீழுள்ள. அயனும் மாலும் ஆகிய இருவருமே அவர்தம் பேதைமை காரணமாகச் செந்நெறி முதல்வர்களால் புறக்கணிக்கப்பட்டவர்.
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.
|