252
 

அருளால் தடுத்தலாகிய கும்பகத்தைச் செய்யும் மேலோதிய (552) முறைமைக் கணக்கினைக் கைக்கொண்டொழுகுவார் அரியர். அவ் வருமைப்பாடாம் 'காற்றைப்பிடிக்கும் கணக்கறி' வாருக்குச் சிவபெருமான் திருவருளால் கூற்றையுதைக்கும் குறிநிலையுண்டாம். உயிர்ப்புப் பயிற்சி செய்வார் வினையால் சிவவினையாக்கிக் கோடற்பொருட்டுச் 'சிவசிவ' என்னும் நான்கு. மாத்திரையுள்ள நம்பன் நற்றொடரை நாவழுத்திப் பயில்வர். அஃதாவது உயிர்ப்பினை விடுத்தற்கு நான்கு முறையும், எடுத்தற்குப் பதினாறு முறையும் தடுத்தற்கு எட்டுமுறையும் ஆக நவின்று பயில்வர். அம் மறைக்கணிப்பினால் வரும் நற்றவம் இயல்பாகவே உயிர்ப்புப் பயற்சியால்தானே எய்துகின்றது. இதுவே திருவள்ளுவ நாயனார் அருளிய,

"வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று."

- 678.

னும் செந்தமிழ்ப் பொதுமறையின் சீரியபொருட்கு நேரிய எடுத்துக் காட்டாகும். மேலும் திருமுறைத் திருவாணைவழித் திருவைந்தெழுத்து ஓதுவார்முன் நமன்றமர் நணுக அஞ்சுவர். அவ்வைந்தெழுத்துள்ளும் ஒப்பில் ஒன்றாய்நின்று சிறப்பது 'சிவசிவ' என்னும் இருதலை மணியாம் செழுமறையே. இதனை வழுத்துவாரை நமன்தூதர் நாடவும் அஞ்சுவர். இவ்வுண்மை வரும் அப்பர் வைப்பாம் அருள்மொழியான் உணர்க:

"இன்னங் கேண்மின் இளம் பிறைசூடிய
மன்னன் பாத மனத்துடன் ஏத்துவார்
மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம்
தன்னி லொன்றுவல் லாரையும் சாரலே."

- 5: 106 - 6.

று: ஒப்பிலாச் 'சிவசிவ' என்னும் ஒன்று.

(அ. சி.) காற்றைப்பிடிக்கும் கணக்கு - மேலே கூறிய அளவு.

(8)

554. மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.

(ப. இ.) மேல் எனப்படும் தலை, கண், காதுகளும் கீழ் எனப்படும் கால், பெருவிரல் முதலியவைகளும், நடு எனப்படும் நெஞ்சகம், கொப்பூழ் முதலியவைகளும் நிறையுமாறு உயிர்ப்பினை உள்ளிழுத்தல் - எடுத்தல் செய்தல் வேண்டும். இதுவே பூரித்தல் எனப்படும். அங்ஙனம் எடுத்தல் செய்த உயிர்ப்பினை அளவுக்குமேல் வெளிவிடுத்தல் செய்யாது உட்பதிவித்தலாகிய அளவுடை விடுத்தலைச் செய்தல் வேண்டும். விடுத்தல் - இரேசகம். சிவபெருமான்பால் பேரன்புடையவராய் அடிவயிற்றினுள் தடுத்தலாகிய கும்பகத்தைச் செய்து வாழ்ந்துவந்தால் நனிமிக எளிதாய்ப் பிழை பொறுக்கும் விழைதகு பெருமானாகிய சிவபெருமான் திருவருளைப் பெறலாகும். ஆலமுண்டான் - மாலால் விளையும் மேலாம் பிழையென்னும் நஞ்சினையுண்டவன். மேல் - தலை, கண், காது முதலியன. கீழ் - கால், பெருவிரல் முதலியன. நடு - நெஞ்சம், கொப்பூழ் முதலியன. (இது பொறைநிலை என்கின்ற வாயுத்தாரணை முறையாம்.)