6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம்) 1733. உருவும் அருவும் உருவோ டருவும் மருவி பரசிவன் மன்பல் லுயிர்க்குங் குருவு மெனநிற்குங் கொள்கைய னாகுந் தருவென நல்குஞ் சதாசிவன் தானே. (ப. இ.) கட்புலனாம் திணைபால் வேறுபாட்டுருவும், கட்புலனாகா அருவும், கட்புலனாயினும் வேறுபாடு தோன்றா அருவுருவும் ஆகிய முத்திறப் பிழம்புகளிலும் அருளால் பொருந்தியிருப்பவன் பரமசிவன். செவ்விவாய்ந்த ஆருயிர்க்குத் தம் முதல் குருவுமாய்த் தோன்றியருள் பவனும் சிவனே. இவை சிவனார் திருவுள்ளக் கோட்பாடாகும். 'வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈயும்' வள்ளலாதலின் தருகவென வேண்டியதும் பின்னையென்னாது அப்பொழுதே வேண்டுவ நல்குவன். அவனே சதாசிவன் என்ப. (அ. சி.) தருவென - தா என்று கேட்க. நல்கும் - விரும்பியவற்றைக் கொடுக்கும். (1) 1734. நாலான கீழ துருவ நடுநிற்க மேலான நான்கு மருவு மிகநாப்பண் நாலான ஒன்று மருவுரு நண்ணலாற் பாலா மிவையாம் பரசிவன் தானே.1 (ப. இ.) சதாசிவக்கடவுள் ஒன்பது (1716) திருமேனிகளையுடையன். உருவம் நாலு; இவை கீழ்ப்படி என்ப; அருவம் நாலும் மேற்படி என்ப; நடுப்படி அருவுருவம் ஒன்று என்ப. இவையனைத்தும் பரமசிவன் அருளிற் கொள்ளும் நினைப்புருவமாகும். இவை முறையே அயன், அரி, அரன், ஆண்டான் எனவும் அருளோன் எனவும், ஒளி ஓசை அன்னை அத்தன் எனவும் கூறுப. (அ. சி.) நாலான கீழது உருவம். அருவுருவமாகிய சதாசிவத்துக்குக் கீழ்ப்பட்ட அயன், அரி, அரன், ஈசன் ஆகிய நான்கு பேதங்களும் உருவம் ஆகும். மேலான நான்கும் அருவம். அருவுருவமாகிய சதாசிவத்துக்கு மேற்பட்ட விந்து, நாதம், சத்தி, சிவம் ஆகிய நான்கு பேதங்களும் அருவம் ஆகும். நாப்பண் - நடுவில் உள்ள. நாலான ஒன்று - ஈசன், அரன், அரி, அயன் ஆகியவர்களை நடத்தும் சதாசிவம் ஒன்றும். அருவுரு - அருவுருவாம். பாலாம் இவை - இவ்வாறு முற் பகுதியில் அடங்கும் ஒன்பது வடிவங்களும். (2) 1735. தேவர் பிரானைத் திசைமுக நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரானென் றிறைஞ்சுவா ரவ்வழி யாவர் பிரானடி அண்ணலு மாமே.
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.
|