696
 

1769. அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்திளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால்என் நந்தி யகம்புகுந் தானே.

(ப. இ.) ஆருயிர் அனைத்தும் மலந் தேய்தற்பொருட்டு, வினைக் கீடாக உடலுடன் அருளால் பொருந்தும். அப் பொருந்துதலையே பிறப்பென்பர் . அருளால் பிறந்து, வினைப்பயன் துய்க்கும்படி அருளால் வளர்ந்திட்டு, அருளால் வினைச்செவ்வி வாய்த்தற்பொருட்டு ஒடுங்கி நின்று, முழுமுதற் சிவனை ஆருயிரின் பழுதகலும்வரை மறைத்து வைப்பதால் மறைந்திட்டு, திருவடி இன்பம் ஊட்ட அருள்புரிந்து சிவகுருவாகி அருளால் சிவபெருமான் ஆருயிரின் அகம் புகுந்தனன். அதனால் எல்லாம் திருவருட் செயலேயாம்.

(9)

1770. அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமுந் தந்திட்டு
அருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால்என் நந்தி யகம்புகுந் தானே.

(ப. இ.) திருவடி மறவாச் சீரிய நினைவே அழியா அமிழ்தப் பெருங்கடலாகும் . அக் கடலின்கண் திருவருளால் ஆட்டுவித்து, அத் திருவருளாலேயே திருவடியினைச் சூட்டி, மறவாப் பேரன்பும் வழங்கி, அத் திருவருட் பேரின்பினையும் உண்பித்து, அத் திருவருளாலேயே அச் சிவன் ஆருயிரின் அகம் புகுந்தான்.

(அ. சி.) அடிபுனைந்து - திருவடிசூட்டி.

(10)

1771. பாசத்தி லிட்ட தருளந்தப் பாசத்தின்
நேசத்தை விட்ட தருளந்த 1நேசத்திற்
கூசற்ற முத்தி யருளந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு 2ளாமே.*

(ப. இ.) ஆருயிர்களைப் பண்டே புல்லிய மலநோய் நீங்க வினை உடல் என்ற வேறிரு பாசத்துடன் இணைத்துவைத்தது திருவருள். பின் செவ்வி வாய்த்ததும் அவைகளை அப் பாசத்தினின்று விடுவித்ததும் அவ் வருளே. பாசம் விடுத்ததும் ஆருயிரின் நேசம் முற்றும் சிவன் திருவடியில் பொருந்துமாறு புரிவது அருள். அச்சமகற்றும் திருவடிப் பேரின்பமும் அருள். திருவயின்பந் திளைத்துச் சிவனுள்ளடங்கி ஆருயிர் நிற்றலால் அவ் வுயிரும் சிவனும் பிரிப்பின்றி ஒன்றாய்ப் பின்னி உறையுமாறு செய்வதும் அருளே.

(11)


1. பாசத்தை. 11. நக்கீரர், கைலைபாதி, 17.

2. மணிசெய் . அப்பர், 5. 97 - 24.

*"இத்திரு மந்திரத்தின் ஏரார் எடுத்துக்காட்
டெத்திறத்தும் நம்பியா ரூரரெழில் - வைத்த
வரலாறு மண்ணுலகில் வந்துமணங் கண்டு
பரனருளால் கைலைபுகல் பார்."