உணரும் உணர்வுத் தெளிவுடையார்க்குத் தேரில் திருவடியே சிவமாகும். தேரில் என்பது புறத்து ஆய்ந்துணரின் என்பதாகும். அகத்து நாடில் திருவடியே சிவவுலகம் ஆகும். உணர்ந்து உரைக்கில் திருவடியே செல்லு நிலையாகும். உணர்ந்து தெளியில் திருவடியே என்றும் பொன்றாப் புகலிடத் தஞ்சமாம் என்க. ஏகாரம் : பிரிநிலை; தேற்றம் எனினுமாம். (26) 183. தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.1 (ப. இ.) திருவருளால் திருவடித் தெளிவினை அருளும் சிவகுருவின் திருமேனி காண்டல் தெளிவினில் சீலமாகும். அவர்தம் திருப் பெயரினைத் திறம்பட நாளும் சொல்லுதல் தெளிவினில் நோன்பாகும். அச்சிவகுரு செவியறிவுறுத் தருளிய திருவைந்தெழுத்தைச் சிறப்புற உளங்கொளக் கேட்டல் தெளிவினில் செறிவாகும். அச் சிவகுருவின் உண்மை நிறைவாகிய திருவுருவினை உடன் கலந்து நாடல் தெளிவினில் அறிவாகும். தெளிவு-ஞானம். தெளிவினில் சீலம் என்பது ஞானத்தில் சரியை என்பதாம். இப்படியே மற்றவற்றையும் கூறிக் காண்க. காண்டல் செப்பல் என்னும் இரண்டும் புறமாகவும், கேட்டல் சிந்தித்தல் இரண்டும் அகமாகவும் கொள்க. (27) 184. தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும் தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும் தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்2 தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.3 (ப. இ.) ஒப்பில்லாத நம் தலைவனாகிய சிவபெருமானைத் திருவருளால் திருவடியுணர்வு கொண்டு சந்திப்பதாகிய உணர்வினில் நேர்ந்தவிடத்து எளிதாக மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலனும் நம்வயமாயிடும். முன்பு அவ் வைம்புலன்களும் நம்மை அவற்றின் வயமாக்கி வினைக்கீடாக ஆட்டின. அவ் வாட்டுதல் இப்பொழுது அகன்றொழிந்தது. அவ் வைம் புலன்களும் முன்னர் இருள்வழி நின்று பிறப்புக்கு வித்தாம் நிலையாப் பொருள்களில் வேட்கை கொள்ளுவித்தது. அது மாறி இப்பொழுது அருள்வழி நின்று சிறப்புக்கு வித்தாம் நிலைத்த பொருளாம் திருவடியில் வேட்கையினை விளைவிக்கும் தனித்தென்பது : ஆருயிர் தன்னை அவ் வைம்புலன்களில் வேறு எனக் காண்ப தென்பதாகும். சந்தித்து - இறைவனைக் கண்டு. (28)
1. கருவ. அப்பர், 5. 13 - 5. " ஐம்புல. சிவஞானபோதம், 8. " கேட்டலுடன் - சிவஞானசித்தியார், 8. 2. 14. 2. மாயைமா. சிவப்பிரகாசம் 7. 2. " சிறைசெய்ய சிவஞானபோதம், 8. 4 - 1. 3. இந்திரியம் சிவஞானசித்தியார். 10 - 2-1.
|