896
 

(அ. சி.) போக்கியம் - போகத்துக்குக் காரணமானவை. போகம் - துன்பமும் இன்பமும். சத்தாதி - ஓசை முதலியன. கருவுற்றிடும் - கருப்பத்தில் தங்கும்.

(36)

2223. இருவினை யொத்திட இன்னருட் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக்
குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப்
பெருமல நீங்கிப் பிறவாமை சுத்தமே.

(ப. இ.) நல்வினை தீவினைப்பயனை நான் என்னும் முனைப்பற்று நின்றுநோக்கல்நோக்குப்போல் நுகர்ச்சியாக நுகர்ந்து கழிக்கும் நிலையும், அருள் தூண்டுதலினால் அடிமை முறையில் முயன்று ஆற்றும் இறை பணியின்கண் விருப்பு வெறுப்பின்றி இறையன்பால் ஒழுகும் நிறை யொழுக்கமும் இருவினை யொப்பு எனப்படும். இவற்றிற்கு எடுத்துக்காட்டு சண்டேசுரநாயனாராவர். தன் தந்தை 'வெகுண்டு கொடிதாம் மொழி கூறித் தண்டுகொண்டு புடைக்கவும் சிறியபெருந் தோன்றலார் பெருமான்மேல் மண்டுகாதல் அருச்சனையின்வைத்தார் மற்றொன் றறிந்திலர்' இஃது உடல், ஊழ் நுகர்விலும,் உள்ளம் ஊழி முதல்வனாகிய சிவபெருமான் திருவடி நுகர்விலும் அழுந்திநின்றமை காண்க. இப் பெருந்தகையார் தம் தந்தை பாலைச் சிந்தும்போது திருவருளின் உந்துதலால் 'தந்தை எனவே கண்டும் முறைமையினால் மாடுமேய்க்குங் கோல் மழுவாய் மாறிடத்' தந்தையின்தாளை அறவெறிந்தார். இது தற்பணியற்று இறைபணியுற்று விளங்கும் எழில்நிலையாகும். இந் நிலையில் ஏறுவினை இயற்றினாரைச் சாராமல் இயற்றப்பட்டாரைச் சார்ந்து அவர்க்கு நிகழும் நற்பயனுக்கு வயலுரம்போல் துணையாயினவாறு காண்க. 'அற' எறிதல் என்பதன்கண்ணுள்ள 'அற' என்பது இயற்றினார்க்கு ஏறுவினை அறவெனவும், இயற்றப்பட்டார்க்குக் குற்ற ஒறுப்பாய்ப் பாவம் அற எனவும் பொருள்தரும். இருவினை யொப்பு வாய்ந்ததும் சிவபெருமானின் இன்னருளாற்றல் விளங்கித்துன்னும். திருவருள் மருவிடத் திருவடியுணர்வை மறவாத பெருங்காதலரை இடனாகக் கொண்டு சிவபெருமான் சிவகுருவாய் எழுந்தருள்வன். எழுந்தருளித் திருவைந்தெழுத்தைச் செவியறிவுறுத்தியருள்வன். பெருமலமாகிய ஆணவமலப் பசையறும். பசையறவே திருவடிச் சிறப்புற்றுப் பிறவாமை கைகூடும். இதுவே தூயநிலை என்ப. இத் திருப்பாட்டைச் சொல்லாலும் பொருளாலும் கருத்தாலும் அப்படியே கொண்டு திகழும் சிவஞானசித்தியார் திருப்பாட்டு வருமாறு :

"இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்றன் சத்தி தோயக்
குருவருள் பெற்றுஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
திரிமலம் அறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம்
பெருகிநா யகன்றன் பாதம் பெறுவது சுத்த மாமே."

(சிவஞானசித்தியார், 4. 3 - 9.)

'சித்தம். சிவனொடும் 'ஆடஆட' என்ற திருமறையின்படி ஒருவருடைய உள்ளம் இருளொடு பொருந்தின் இருளாய் நிற்கும். அதுபோல் மருள், தெருள், அருள், பொருளென்பனவற்றோடு பொருந்தின் அவ்வவையாய் நிற்கும். பொருள் - மெய்ப்பொருள்; சிவபெருமான்.