106
 

8. பிறன்மனை நயவாமை

244. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

(ப. இ.) இம்மை வாழ்க்கையும், உம்மை வாழ்க்கையும், அம்மை வாழ்க்கையும் செம்மையுற அமைவதற்கு ஒருவனும் ஒருத்தியுமாய் அம்மையப்பர் அருளால் இம்மை வாழ்க்கைத் துணையாய் மனையறம் பேணுதலே தூய இல்வாழ்க்கையாகும். அதன் பொருட்டு ஊரார் உறவினர் உற்றார் பெற்றோர் சான்றோர் ஆசான் தெய்வம் சான்றாகப் பொற்றாலி புனைந்து கைக்கொண்ட மனையாளே ஆத்த மனையாளாவள். ஆத்த - புனைந்த; கட்டிய. அத்தகைய கற்பு நிறை ஆர்ந்த பொற்புறு மனையாள் மதிற்காவலும் வாயிற்காவலும் ஆகிய புறக் காவலமைந்த வீட்டகத்துத் தங்கியிருக்கவே, பிறரால் அப் புறக் காவலுடன் அகக் காவலாகிய நிறைக்காவலும் சேர்ந்து காக்கப்படும் பிறன் மனையாளைக் காமுறுவர் விளைவதறியாக் காளையர். முப்பழங்களுள் ஒன்றாய் இன்பப் பகுதியாய்க் காணப்பெறுவது பலாப்பழம். அது செவ்வியுறக் காய்ந்து நன்கு கனிந்தால் மிக்க இன்பந்தரும். அத்தகைய பலாமரத்தின் கனியை எவ்வகை அச்சமுமின்றிப் புகழும் புண்ணியமும் பெருகவும் நிலையாம் சிவனடி எய்தவும் நுகரலாம். அவ் இன்பத்தை உலைவின்றி நுகரமாட்டாத கொடியோரும் சிலராவர். அவர் எக்காலமும் நீங்கா அச்சமும், பெருகும் பழியும் பாவமும், நரகிடை வீழ்தலும், இன்ப மின்மையும், துன்ப நீங்காமையும், பிறப்பினைத் தருதலும் ஆகிய நுகர்வல்நுகர்வை நுகர்வதற்கு முயல்வர். அஃது ஈச்சம் பழத்தினை உண்ண விரும்பிக் கிட்டாது இடருற்று எய்த்தலை ஒக்கும். வாழ்க்கைத் துணைவராயுள்ளார் உருவமாகிய உடலாலும், உருஅருவமாகிய உள்ளத்தாலும், அருவமாகிய உணர்வாலும், அப்பாலாகிய உயிராலும் ஒருவருக்கொருவர் துணைவராவர். உடலால் காத்தல் மதிலும் வாயிலும் அமைப்பதால் ஆகும். உள்ளத்தால் காத்தல் கற்புநிறை வழுவாதொழுகு தலாலாகும். உணர்வால் காத்தல் ஒத்த பண்புடையராய் நண்பகலாது நடத்தலாலாகும். உயிர்க் காவல் என்பது திருநீல நக்கநாயனாரும் அவர் தம் மனைவியாரும் அகத்தும் புறத்தும் நீங்காது அருளாலாற்றிய சிவ வழிபாட்டுத் தவ வாழ்க்கையாகும். இக் குறிப்பினை நினைவிற் கொள்ள வாய்ப்பாம் வெண்பா வருமாறு:

உருவமுட லாகும் உருவருவாம் உள்ளம்
அருவமுணர் வப்பா லுயிராம் - திருவருளால்
இல்லுறைவு கற்புநிறை ஏருணர்வு தெய்வவழிச்
செல்லுமியல் வாழ்க்கைத் துணை.

காத்த - பிறனால் காக்கப்பட்ட வாழை, அறப்பகுதியாகவும், மா பொருட் பகுதியாகவும் கொள்ப.

(அ. சி.) ஆத்த - தாலிகட்டின.

(1)