2611. கருடன் உருவங் கருதும் அளவிற் பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவாங் குறித்தஅப் போதே திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. (ப. இ.) அரவின் நஞ்சினை அகற்றும் அம் மறையோன் அரவினுக்குப் பகையாம் கருடனின் மறையினைப் பல நாள் உருவேற்றித் திருவாய் நிற்கும் உள்ளத்துடன் கருதிக் கண்ணாற் பார்ப்பன். பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும். நஞ்சின் பயனும் கெட்டொழியும். அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் என்றும் பிறவாயாக்கைப் பெரியோனே பிறவிக்குப் பகையாவன். அவன் திருப்பெயராகிய திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும். அதனைக் கைக்கொள்வதே சாலச் சிறந்ததென்பது இதனால் விளங்கும். கருடபாவனை வருமாறு : "ஆதிபௌதிக கருடன், ஆதி தைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக்கருடன் மூவகைப்படும். இவ்வாறு பொருள் தோறும் கண்டுகொள்க அவற்றுள், உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் அது போல வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும் அவற்றுள், ஈண்டுக் கருடனென்றது கருடனுக்கு அதிதெய்வமாய் மாந்திரிகனுளத்திற் காணப்படும் மந்திர ரூபமாகிய ஆதி தைவிக கருடனை. அதனைப் பாவித்தலாவது நாடோறும் பயின்று வந்த பயிற்சி விசேடத்தால் அம் மந்திர ரூபமே தானாக அநந்நிய பாவனை செய்து தன்னறிவு அதன் வசமாம்படி உறைத்துநிற்றல். அங்ஙனம் நின்று அம் மந்திரக்கண் கொண்டு பார்ப்பவே அஃது அவ் விட வேகத்தை மாற்றுதல் ஒருதலையாகலின், அப் பாவனை ஈண்டைக்கு உவமையாயிற்று." (சிவஞான முனிவரர், 9 2-3பேருரை.) அநந்நியம் - வேறன்மை. உருவம் உயிர்மறை ஊட்டும்அரு ளாற்றல் வருபொருள் தோறுண்டாம் வகுப்பின்-தெருளுலகில் ஆதி பௌதிகம் ஆதிதை வீகமுடன் ஆதியான் மீகம் அறி. தைவிகம் - தைவீகம். ஆன்மிகம் - ஆன்மீகம். ஆத்தியான்மிகம் என்பது ஆதியான் மீகம் என நின்றது. (4) 2612. தோன்ற அறிதலுந் தோன்றல்தோன் றாமையு மான்ற வறிவு மறிநன வாதிகள் மூன்றவை நீங்குந் துரியங்கள் மூன்றற ஊன்றிய நந்தி யுயர்மோனத் தானன்றே
1. கண்டதை. சிவஞானபோதம், 9. 2 - 3.
|