1112
 

பொற்பதிக் கூத்து

2693. தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடஞ் 1செய்யுமே.

(ப. இ.) தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, உச்சி ஆகிய வியத்தகு திருமுகங்கள் ஐந்தும் அருளோன் குறியிற் காணப்படும். அருளோன் குறி - சதாசிவலிங்கம். ஒப்பில் பேரின்பத்தினையே வடிவமாகவுடைய சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் முத்திறப் பாகுபாட்டினின்று மேலோதிய திருமுகங்களினிடமாகத் தனிநடம் புரிந்தருள்வன். இதுவே பொற்புறு நடமாகும். திருமுகங்கள் ஐந்தும் முறையே நடுக்கம், விளக்கம், ஆட்சி, தோன்றுவித்தல், இயக்கம் என்பன. இவற்றை முறையே அகோரம், வாமதேவம், தற்புருடன், சத்தியோசாதம், ஈசானன் எனவும் கூறுப. இவ்வுண்மை வரும் சிவ தருமோத்திரச் செய்யுளான் உணரலாம்:

"உச்சிமுகம் ஈசானம் ஒளிதெளியப் பளிங்கே
உத்தரபூ ருவதிசையை நோக்கியுறும் உகந்தே
நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி
நிகழுமுகம் தற்புருடம் கோங்கலர்போல் நிறமே
அச்சுறுத்தும் அகோரமும் அறக்கரிது கராளம்
அவிழ்தாடி வலத்தோளில் தென்னோக்கி அமரும்
செச்சைநிறத் தெரிவைமுகம் இடத்தோண்மேல் வாமம்
சிறுபுறத்தின் முகஞ்சத்தி யோசாதந் திகழ்வால்."

ஒப்பில் பேரின்பம் - நிரதிசய இன்பம்.

(அ. சி.) உபய உபயத்துள் - அருவத்தும் உருவத்தும் அருவுருவத்தும்.

(1)

2694. அடியார் அரனடி யானந்தங் கண்டோர்
அடியா ரவராவ ரத்தரு ளுற்றோர்
அடியார் பவரே யடியவ ராமால்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

(ப. இ.) சிவபெருமான் திருவடியின்பத்தினைத் திருவருளால் கண்டோர் மெய்யடியாராவர். சிவபெருமானின் திருவருளைப் பெற்றோர் அருளடியாராவர். திருவடியின்பத்தினைச் சிவகுருவினருளால் நுகர்பவரே திருவடியாராவர் திருச்சிற்றம்பலமாகிய பொன்னம்பலத்தின்கண் நிகழும் திருக்கூத்தினைக் கண்டோர் சிவனடியாராவர். இவர்கள் மெய்யே அருட்டிரு மேவுசிவம் நான்மைமுன் பெய்யடியார் நானிலையர் பேச, எனப்படுவர்.

(அ. சி.) அத்தர் - சிவன். அடி ஆர்பவர் - அடிசேர்ந்தோர்.

(2)


1. கற்பனை. 12. தில்லைவாழந்தணர், 2.