1227
 

(ப. இ.) காரியவுலகம் பலவாயினும் காரணமாயை ஒன்றே. அப்பொருண் முதற் காரணத்தினின்றும் பல காரியத்தையும் உண்டாக்கி உதவும் வினைமுதலாகிய நிமித்த காரணமும் ஒன்றே. அக் காரிய ஆக்கப்பாட்டைப் பெற்றுப் பயன் எய்துவதும் உண்பதும் பலவாம். ஆக்கப்பாடெய்துவதற்குத் துணை நிற்கும் துணைக்காரணமாகிய அறிவாற்றலும் ஒன்றே. அவ் வறிவாற்றலுக்குத் துணை அறிவில் ஆற்றலாம் கருவிகள் பல. இக் கருவிகளும் ஆக்கப்பாடுகளே. எனவே ஆக்குவோன் ஆக்க முதல் ஆக்கத்துணை ஆகிய காரணங்கள் ஒவ்வொன்றே. ஆக்கப்பாடுகளும் அவ் வாக்கப்பாட்டைப் பெறறுப் பயன் துய்க்கும் ஆக்கப்பாடும் ஆக்கமுதலும் இல்லாத ஆருயிர்களும் பல என்க. ஆக்குவோன், ஆக்க முதல், ஆக்கப்பாடு, ஆக்கத்துணை, ஆக்கக்கோள் எனப்பொருள் ஐந்தாம். இவை திருவைந்தெழுத்தால் பெறப்படுவனவுமாம். ஆக்குவோன் சிறப்பு, ஆக்கமுதல் ஆக்கப்பாடுகள் மறைப்பு, ஆக்கத்துணை வனப்பும், நடப்பும், ஆக்கக்கோள் யாப்பு. இம் முறையான் பல்வேறு உலகங்கட்கும் தெய்வம் ஒன்றே காண்மின். அது நடப்பென்னும் ஆதியாகும். எனவே உடம்பொடு புணர்த்தலென்னும் உத்தியால் மறைப்பும் ஈண்டே பெறப்படும். உலகையும் ஆருயிர்களையும் கட்டு நிலையில் நடத்தும் திருவருள் நடப்பு. ஒட்டு நிலையில் நடத்தும் திருவருள் வனப்பு இவ் விரண்டும் ஈண்டு உலகென ஓதப்பெற்றன. இவ் வுலகுக்கு உயிராவது சிறப்பு. ஆருயிரையும் அவ் ஆருயிர்க்குப் பேரின்பம் அருளும் பேருயிராம் சிவபெருமானையும் பழுக்கச் செய்வது வனப்பு. அப் பழத்தை யுண்டு என்றும் பொன்றாது இயைந்து நின்று இன்புறுவது யாப்பு. அதுவே 'நன்று கண்டீர் இனி நமச்சிவாயப் பழம்' என்று ஓதப்பெற்றதை நுகரும் உரிமையுடையது. இனி என்பது இனிப்பு என்பதன் முதனிலை இனிப்பையுடைய பழம் என்றாகும். திருவருளால் அதனைச் சார்ந்து அஃதூட்டத் தின்று கண்ட அடியேனுக்கு அது தெவிட்டா இனிப்பாய் இன்பாய்த் திகழ்கின்றது. சிவபெருமான் நால்வேறு நிலையினனாய் நின்று உலகு உயிர்களை நடத்துகின்றனன். அவை கடந்தநிலை, காரணநிலை, கடத்துநிலை, கலப்புநிலை என்பன. இவை முறையே சிறப்பு, நடப்பு, வனப்பு, மறைப்பு, யாப்பு என்பனவற்றைக் குறிப்பனவாம். கலப்பு நிலையின்கண் மறைப்பும் யாப்பும் அடங்கும். இவ் வுண்மை யனைத்தும் அங்கை நெல்லிக்கனியென விளக்கும் மங்காச் சிவஞானசித்தியாரின் திருப்பாட்டு வருமாறு:

"உலகினை யிறந்து நின்ற தரனுரு வென்ப தோரார்
உலகவ னுருவிற் றோன்றி யொடுங்கிடு மென்று மோரார்
உலகினுக் குயிரு மாகி யுலகுமாய் நின்ற தோரார்
உலகினில் ஒருவன் என்பர் உருவினை யுணரா ரெல்லாம்."

(1. 2 - 21.)

இந் நிலை நான்கும் வருமாறு நினைவு கூர்க: கடந்தகா ரண்ணம் கடத்தல் கலப்பாம், உடலின்பம் வேறுடனாய் ஒன்று. கடந்தநிலை பேரின்பப் பெருவடினனாகிய சிவபெருமானைக் குறிக்கும் குறிப்பாகும். அஃது உடலின்பம் எனக் குறிக்கப்பட்டது. இன்பவுடல் என மாறுக. அவன் ஐயஞ்சின் அப் புறத்தான் என்றும் ஓதப் பெறுவன். ஐயஞ்சாவன: ஐவகையஞ்சு: அவை பூதம் 5 பொறி 5, எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு, குணம் 5, ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு உவப்பு (அராகம்) 5, அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் 5. என்பன.

(6)