22
 

2. மும்மூர்த்திகளின் முறைமை

51. அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நானும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.1

(ப. இ.) என்றுங் குன்றா எவ்வளவையையும் கடந்த இளமையும், அழகும், பேரொடுக்கமாகிய ஈற்றினைச் செய்யும் பெருமையும், அளவில்லாத காலம் நானும் இருந்து உணர்ந்தாலும் முடிவு பெறாது. சங்கரனாகிய சிவனும் நம்முடைய ஆய்வுக்கு எட்டுவதாகிய தளர்வினை எய்தான். தன் அடியார் அருளால் கூறும் அளவில் பெருமை அனைத்தும் உடையன். அத்தகைய சிவபெருமான் பெருமையினை அரிஅயன் இருவராலும் சொல்லவொண்ணாதென்க.

(அ. சி.)அந்தம் - அழகு.

(1)

52. ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானுஞ்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

(ப. இ.) அனைத்துலகினுக்கும் அந்தத்தைச் செய்து பின் படைக்குங்கால் ஆதிப்பிரானாக நிற்கும் அரனும், அழகிய நீலமணி போலும் அரியும், உலகப் படைப்புக்குக் காரணனாகிய அயனும் என்று சொல்லப்படும் மூவரும் தொழில் பற்றி முறையே முப்பெயர் பெற்றனர். அஃதல்லாது பொருளால் மூவரல்லர். அருளால் ஆராய்ந்து நோக்கின் மூன்று நிலையும் ஒரு முழுமுதற் சிவனுக்கே யுரியன என்பது புலனாகும். இக் கருத்தமையத் தொடர்பினால் ஒன்றே முழுமுதல் என்று கூறாது, வேறு வேறு உலகோர் மாறுபடக் கூறித் தம்முள் பிணங்கி மயங்குகின்றார்கள்.

(அ. சி.) ஆதிப்பிரான் - உருத்திரன். மணி வண்ணன் - மால். அலர்மிசையான் - அயன். தொடர்ச்சியில் - தோற்றத்தில்.

(2)

53. ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது2 என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

(ப. இ.) இருவினைகட்கு இருப்பிடமாகிய மாயைக்கு அப்புறம் இருப்பவன் வாராத்திருவும் பேராமுதன்மையும் ஒருங்கமைந்த சிவன். அவனே ஈசன் எனப்படுவன். உலகில் பெருந்தெய்வமாவது உருவின் நினைப்பிற்கும் அருவின் நினைப்பிற்கும் காரணமாயுள்ள அருவுருவமே


1. மறையினால். சிவஞானசித்தியார், பாயிரம் - 4.

2. அதுஇது. சிவஞானபோதம், 12. 4 - 1.