2. யாக்கை நிலையாமை 187. மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரந் திண்ணென் றிருந்தது1 தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்2போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. (ப. இ.) ஒருவகையான மண்ணே இருவகைக் கலமாகும் ஒன்று தீயினைச் சேர்ந்து வன்மையாக இருந்தது. மற்றொன்று தீயினைச் சாராது தன்னியல்பாய் பசுமண்ணாய் மென்மையாக இருந்தது. விண்ணில் நின்று மழைநீர் விழுந்தால் தீயினைச் சாராத பசுமட்கலம் அழிந்து மீண்டும் மண்ணாகும். தீயினைச் சார்ந்த கலம் அழியாது நிலைபெற்று நிற்கும். தீயினைச் சாராத கலம்போன்றது திருவருள் வழி நில்லாத உடம்பு. அது தன்னகத்துள்ள ஆவி உறுதிப்பயனாகிய சிவத்தன்மை எய்துதற்கு வாயிலாகாமல் மீண்டும் பிறப்பதற்கு வாயிலாகி அழிகின்றது. அவ் உடம்பினைக் கழித்து எண்ணிறந்த மாந்தர் இறந்தொழிகின்றனர். தீ - சிவபெருமான். நீர் - திருவருட் செல்வி. சிவபெருமான் திருவடி நினைவினையுடையார் மீண்டும் பிறவார். அந்நிலை மாறா உறுதியான திண்ணென்ற அருள்நிலை. அதற்கு வாயிலாகிய சிவனுடைமையாம் இவ் உடம்பும் ஏற்றுரையான் திண்ணென்றிருக்கும் எனப்பட்டது. ஏற்றுரை - உபசாரம். (1) 188. பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே. (ப. இ.) வினைநுகர்வுப் பண்டங்களைப் பெய்துவைத்து மேற் கூரையும் அமைத்து நன்மையும் வன்மையும் உள்ளனபோற் காணப்படும் இவ்வுடல் நாட்பட மூப்புப் பிணியுற்றுச் சாக்காட்டினை எய்தும். எய்தவே, இவ்வுடலாலும் உடலுழைப்பாற் பெற்ற உடைமையாலும் ஐம்புலன் நுகர்வு ஆரத்துய்த் தின்புற்ற பெண்டிரும் மக்களும் தத்தம் உடம்பினை நீக்கி அவ் ஆவியுடன் பின் செல்லார். ஆயின் செந்நெறியாகிய நன்னெறிக்கண் நின்று மேற்கொண்ட திருவருளால் எய்தும் சீலமும் திருவடியுணர்வுமே உடன் துணையாய் ஒத்து வழிநடக்கும். ஏனைய உலகியற் பொருள்களும் செயல்களும் நிலைத்த துணையாக அவ்வழியில் நடவாவென்க. சீலமும் அறிவும் சொல்லவே இனக்கோளாக நோன்பும் செறிவும் கூட்டிக் கூறிக்கொள்க. (அ. சி.) பண்டம் . . . விழுதலால் - உயிர் நீங்கி உடல் கீழே விழுதலால். மண்டி - சேர்ந்து. (2)
1. மண்ணுலகும். ஆரூரர், 7. 46 - 6. 2. சலத்தால் - திருக்குறள், 660.
|