மாறு செல்லும் அதுவே ஆண்டு அவ் வுயிர்களின் அறிவு நிகழ்ச்சியாகும். அச் சிவத்தின்பால் நிகழும் அன்பு வாயிலா அழியா இன்பு நிகழும். அவ்வின்பின்கண் அவ் வுயிர்கள் அழுந்தும். அதுவே அவ்வுயிர்களின் அன்பு நிகழ்வாகும். ஆண்டு அவ் வுயிர்கள் அவனையே பற்றி அவன் வண்ணமாய் நிற்கும். அதுவே அவ் வுயிர்களின் ஆற்றல் நிகழ்வாகும். இம் முறையான் ஆண்டுச் செய்யும் பணியும் சிவப்பணியேயாம். மேலும் திருவடிப் பேற்றின்கண் ஆருயிர்களின் அறிவு முற்றறிவாகத் திகழும். அவ்வறிவான் நிகழும் அன்பு ஆற்றல்களும் முற்றுணர்வுடைய சிவச்செயலே யாகும். உயிர்கள் ஒட்டின்கண் ஆண்டான் அடிமை என்னும் முறைமை பூண்டு திகழும். அம் முறைமையால் அடிமையின் செயல் அனைத்தும் ஆண்டான் செயலே யாகும். அதனாலும் தன்பணியில்லை. இத்தகைய இரண்டிடத்தும் செய்யும் பணிகள் திருப்பணிகள் ஆவன மட்டுமன்றித் திருவடிக்கு ஒப்புவித்தலும் உண்டு. அம் முறையே அத்தனாகிய சிவபெருமானுக்கு ஆருயிர்கள் அருள் நிலையில் நிற்பதால் ஈரிடத்துப் பணியையும் ஒப்புவிக்கின்றன. அக் குறிப்பே இரண்டும் அருளாலளித்தலான் என்று ஓதப் பெற்றது. இம் முறையான பெரும்பற்றாகிய பத்திப் பட்டோர்க்கு யாண்டும் அவர் பெயரான் வழங்கும் பணியொன்றும் இல்லை. இதுவே மெய்ப்புணர்ப்பின் மெய்ப் பொருளாகும். கருவியும் கையும் மருவிச் செய்யும் செய்கை கருத்தாவின் பெயரால் வழங்குவதே முறைமையாகும். அங்ஙனமின்றிக் கருவி கை முதலியவற்றின் பெயரால் வழங்கப்படுமாயின் அதனை ஏற்றுரை என்றே கொள்ளப்படும். இவற்றான் இவ் வுண்மை விளங்கும் இதனைத் திருவள்ளுவ நாயனார், "என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கலநின் றவர்." என ஓதியருளினர். இதன்கண் தொல்படை மறவன் தன் பணியைத் தலைவன் பணியாகவே மொழிந்து நிலை நிறுத்தினமை பெறப்படுதல் காண்க ஆகவே அம் மறவன் தன்னைக் கருவியாகக் கொண்டனனேயன்றிக் கருத்தாவாகக் கொண்டனன் அல்லன் என்பது விளங்கும். இதனை, 'உன்னடியேன் செய்பணிகள் உன்தொண்டே உன்னருளே, உன்னடிக்கே ஒப்புவித் தேன்' என்பதனால் நினைவுகூர்க. (அ. சி.) இரண்டும் - பெத்தம் முத்திகள் இரண்டும். பணி தாமாகச் செய்யும் பணி. (என்னெனின் அன்புசெய்பவர் பெத்தத்தில் எல்லாம் சிவன்செயல் என்று பணி இயற்றுவதாலும், முத்தியில் சீவபோதம் இழந்து சிவபொதமாய் நிற்றலாலும் என்க). (6) 2583. பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகக் குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால் இறைவனென் றென்மனம் ஏத்தகி 1லாவே. (ப. இ.) ஆருயிரின் உடம்பு ஈண்டுப் பறவை என ஓதப்பட்டது. அஃதோர் ஆகுபெயர். அவ் வுடம்பினை நெடுநாள் அழியாது ஓம்ப வேண்டுமென்னும் பேரவாப்பூண்டு காயகற்பந் தெடிச் சில்லோர் அலைவர்.
1. வெருவரேன். 8. அச்சப்பத்து, 2.
|