795
 

(அ. சி.) ஊண்பொருட்டு - வயிற்றுப் பிழைப்பிற்கு. அந்தகராவோர் - அழகிய குருபீடத்தில் அமர்வோர்.

(2)

2008. ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமா றசத்தறி விப்போன் அறிவிலோன்
கோமா னலனசத் தாகுங் குரவனே.

(ப. இ.) பிறப்பற்றுச் சிறப்புறுதற்காம் வழிவகைகளை அறியாதோன் ஆமாறறியாதோனாவன். அவனையே மூடன் என்று சொல்லும் உலகம். காமம் வெகுளி மயக்கம் முதலிய குற்றம் நீங்கா வீணர்கள் - பாவிகள் அதிமூடராவர். அத்தகைய பெரும்பாவிகளை ஒத்தவனே பொய்ப்பொருளை மெய்ப்பொருளென அறிவிக்கும் அறிவிலாக் குருக்கள். அஃதாவது (1995) செத்துச் செத்துப் பிறக்கும் மால் முதலிய சிறு தெய்வங்களையும், கோள்களையும், அவற்றிற்குப் பெருமை தரும் மறைகளையும், அவற்றைக் கொண்டாடும் ஆசிரியர்களையும் நன்கு மதித்து வழிபடும் அவரே போலிக் குருக்கண்மார் ஆவர். அந்தோ இவர்கள் தாம் கெடுவது மட்டுமல்லாமல் பிறரையும் வழிபடுவித்துக் கெடுக்கின்றனர். என்னே கொடுமை! இவர்மாட்டுக் கழிவிரக்கங்கொண்டு நம் அப்பர்பெருமான் கூறும் அருள்மொழி வருமாறு:

"எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன்
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே."

- அபபர். 5 - 100 - 7.

அவன் குலகுருவாம் பெருமையுடையவனாகான். அவன் உண்மைக்கு மாறாகிய பொய்க்குரவனாவன.்

(அ. சி.) கலதி - பாவி. அசத்து - பொய்ப்பொருள். கோமானலன் - பெருமையுடையவன் அல்லன்.

(3)

2009. கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால்
தற்பாவங் குன்றுந் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கு நாட்டுக்கும் கேடென்றே
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

(ப. இ.) குலகுருவாய் வருவார் வீண்நினைப்பாய் நினைவுகளைத் தோன்றும் போதே துடைத்துவிடாமல் முறுகவிடுவாராகார். அங்ஙனம் பயனில் நினைவுகளை விடாமல் நினைப்பார் கற்பித்தலாகிய உபதேசத்தைப் புரிந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் ஆருயிரும் தன் தன்மையாகிய அறிவுநிலையிற் கெடும். அவ் வுயிரின் செந்நெறி முன்னேற்றத்திற்கு அதுவே பகையாகும். அறமுறை தவறாது நற்பான்மையோடு ஆட்சி புரியும் வேந்தனுக்கும் அந் நாட்டுக்கும் நீங்காக் கேடே நாளும் ஓங்கும். இவ் வுண்மையினை நந்திமுதல்வர் (98; 99) தொன்மையிலேயே திருவாணை மொழிந்து தேற்றியருளினர்.

(அ. சி.) கற்பங்கள் - சங்கற்பங்கள் (எண்ணங்கள்), தற்பாவம் ஆன்ம அறிவு.

(4)