1129
 

உதிர மென்னும் முதிர்சா றொழுக
நகையெனு முத்தந் தொகையுறத் தோன்றச்
சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்டு
அரைத்தக வயிரங் கரைத்தவித் தகனே
. . . . . . . . . . . . . .

(திருக்கழுமல மும்மணி, 25.)

(அ. சி.) ஏகாசம் - மேலாடை. மோகாய - விருப்பமுள்ள. மாகாயமன்று - ஆகாயமன்று.

(13)

2729. அம்பல மாவ தகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாகுமே.

(ப. இ.) அனைத்துலகின்கண் காணப்படும் இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் முற்றும் சிவபெருமான் திருக்கூத்தியற்றும் திருவம்பலமாகும். ஆதியாகிய நடப்பாற்றலையுடைய நாயன் திருவடியும் அம்பலமாகும். நீர் மண்டலம், தீ மண்டலம் (இனம்பற்றி ஏனைய பூதங்கள்) ஆகியவைகளும் அம்பலமாகும். மெய்ம்மை அம்பலமாவது செந்தமிழ்த் திருவைந்தெழுத்தேயாம். திருவைந்தெழுத்து அம்பலம் என்பதை 2715 ஆம் திருப்பாட்டின்கண் விளக்கியுள்ளாம்; ஆண்டுக் காண்க.

(அ. சி.) இம் மந்திரம் எல்லாம் சிவத்தின் நாடகசாலைகள் என்று கூறிற்று.

(14)

2730. கூடிய திண்முழ வங்குழ லோமென்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரானென்ன
நாடிய நற்கண மாரம்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காகுமே.

(ப. இ.) சிவபெருமான் ஆடிய திருக்கூத்தினைக் காணும் பேறு திருவருளால் பெற்ற மானுடர் ஆண்டு முழங்கிய குடமுழாவாகிய திண்ணிய முழவோசையினையும், புல்லாங்குழல் ஓசையினையும் பொலிவு பெறக் கேட்டனர். எல்லாம் ஓம் என்று ஒலிக்கும் நுண்மையினையும் உணர்ந்தனர். ஆதிப்பிரானென்று போற்றினர். சிவபெருமானையே நாடி நிற்கும் வரிசை யமைந்த நற்கணமும், பல்வேறு வகையான பூதகணங்களும் அவன் ஆடும் (2678) பாண்டரங்கக் கூத்தினைக்கண்டு பாடியாடித் தொழுதனர். பாண்டரங்கம் வருமாறு.

"ஏறமர் கடவுண் மூவெயில் எய்வுழிக்
கூறுகூ றாகக் கொடியொடும் படையொடும்
வேறுவே றுருவின் விண்மிசைப் பரத்தர்
அவ்வழி யொளியொடு முருவொடுந் தோன்றித்

5 தேர்மு னின்று திசைதலை பனிப்பச்