811
 

(அ. சி.) உயிரது - உயிர்ப்பு. அயர் அறிவு - மறந்து நினைக்கும் அறிவு. பயிர் - விளைவு, வாழ்வு.

(12)

2041. உயிரது வேறா யுணர்வெங்கு மாகும்
உயிரை யறியில் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கு முணர்வை
அயரும் பெரும்பொரு ளாங்கறி 1யாரே.

(ப. இ.) திருவருளால் உயிர் உடலின் வேறு என்னும் உண்மை ஏற்படின் உணர்வு சுட்டும் சிற்றும் கடந்து முற்றாய் எங்கும் ஆகும். அதுபோல் உயிரின் உண்மையை அவ் வருளால் அறியில் அவ் வுணர்வே மெய்யுணர்வாகும். உடலை நீங்கச்செய்வது உயிரன்று. அவ் வுண்மையினை அறிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதும் பெரும்பொருளே. இவ் வுண்மைகள் அவனருளாலன்றி உணரவாரா. சுட்டும்: சுட்டுணர்வும். சிற்றும்: சிற்றுணர்வும். முற்றாய் - முற்றுணர்வாய்.

(அ. சி.) அயரும் - மறைக்கச்செய்யும். உயிர் அன்று உடலை விழுங்கும். உணர்வை - (உடல் உயிரை விழுங்குதல் என்பது சாதல்) பிரகிருதி மாயா உடலைச் சுத்த மாயா உடலாக உணர்தல்.

(13)

2042. உலகாணி யொண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் நேருற நிற்குஞ்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை 2யறிவதே.

(ப. இ.) தேரினைத்தாங்கும் அச்சாணி யொத்து விளங்குபவன் 'அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர், உண்டு போலுமோர் ஒண்சுடர்' என்னும் வெண்சுடர். அவனே தனக்கோர் தலைவனில்லா முழுமுதற் றலைவனாவன். அவனே எல்லாம் கைகூடச்செய்யும் சித்தன். அவன் நிலமுதலாகச் சொல்லப்படும் ஐம்பூதங்களுள்ளும் நுண்மையனாய், வண்மையனாய், திண்மையனாய், கண்மையனாய், எண்மையனாய் நிற்பன். நுண்ணிய உடலுடன் நிலவும் முத்தேவருள்ளிட்ட எத்தேவருந்தொழும் விழுத்திணைப் பெருமானைத் தன்னிடத்து வெளிப்பட்டு வாழ்பவனாகச் செய்வது தன்னை யறிவதென்னும் தலையறிவாகும். இதற்கோர் ஒப்பு "ஆளுடையபிள்ளை யரசுநம்பி யாரடிகள், கேள்மூலர்" ஆகிய ஐவர்தம் ஐந்தெழுத்து அருள் நூலை நாம் அகங்குழைந்து ஓதுங்கால் எவ்வெவர் நூலை ஓதுகின்றேமோ அவ்வவர் அங்ஙனம் ஓதப்பெறும் திருமறை உடலாகத் தாம் உயிராக நம்முயிர் உறையுளாக விளங்கித் திகழ்வது உணர்வுண்மையன்றோ, அதுவேயாம். இவ் வுண்மையினை வரும் வெண்பாவால் நினைவு கூர்க:

"ஐவர் பெருநூலை ஆங்கோத அவ்வவரும்
செய்வரங்கு வாழ்தல் சிறந்துசிவ - மெய்வாழ்வாம்
அம்மறை யாமுடல் ஆங்கவ ராமுயிர்
நம்மெய் உறையுளாம் நாடு."


1. அறிந்தும். சிவஞானபோதம், 3. 6 - 1.

2. தன்னறி. சிவப்பிரகாசம், உண்மை, 8 - 2.