879
 

சாதனம் - துணை. ஏற்றுதல், உயிர்ப்புப் பயிற்சியால் ஒளி விளங்கச்செய்தல். எரிதல் - விளங்குதல்.

(36)

2183. உண்ணாடும் ஐவர்க்கு மண்டை யொதுங்கிய
விண்ணாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்தைவர் கூடிய சந்தியிற்
கண்ணாடி காணுங் கருத்ததென் றானே.

(ப. இ.) புறநாட்டமின்றி அகநாட்டமாய்த் தொழிற்படும் செவி மெய் கண் வாய் மூக்கு என்னும் அறிதற்புலன்கள் ஐந்தும் உச்சித் தொளைவரை நாடும். அங்ஙனம் நாடுதற்குரிய இடமாகிய வெளி அருள் வெளி எனப்படும். அவ் வெளியினை வினவி அண்ணாந்து நோக்கின் ஐம்பொறியும் ஒடுகிய கடந்தநிலை தோன்றும். இந் நிலையே நினைப்பு மறப்பற்ற திளைப்புநிலை. இதனையே அருட்கண்ணை நாடி அதன் வாயிலாகப் பொருட்பேற்றினை எய்துதல் என்ப. இதுவே நற்றவஞ் சார்வார் கருத்தென்று நாட்டினர். இவ் வுண்மை வரும் சேக்கிழாரடிகள் அருள்மொழியான் உணரலாம்:

"ஐந்துபேர் அறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்."

(12. தடுத்தாட் - 106.)

கேட்டல், நாடல், தெளிதல், திளைத்தல் ஆகிய நான்கனுள் இது திளைத்தல் எனப்படும்.

(அ. சி.) ஐவர் - பொறிகள் ஐந்து. வெளி - சிவம். ஐவர் கூடிய சந்தி - ஐம்பொறி வழிகளும் கூடும் இடம். கண் நாடி - உள்நோக்கி.

(37)

2184. அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறி வாகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியா தறிவானை யாரறி வாரே.

(ப. இ.) தன்னறிவால் சுட்டி யுணரப்படாததாய தூயமாயை முதலியவற்றைத் திருவருட் கண்ணால் காண்பவனே தெளிந்த அறிவுடையவனாவன். அவற்றைத் தன்னறிவான் அறியலுறுவான் அறியாதவனாவன். அறிவான் ஆகான் என ஓதினர். அறிவு விளங்காது புலம்புற்றிருந்த ஆருயிரை மாயாகாரியங்களைக் கூட்டி ஐம்பாடுகளிற் செலுத்தி மறைந்துநின்று அறிவித்துவரும் அவ் வருளுடையானை அவன் திருவருள் துணையின்றி எவர்தாம் அறிவர்! இப்பாடு கீழ்ப்பாடு என்ப. பாடு - அவத்தை.

(அ. சி.) தன்னறிவு - ஆன்மஞானம்.

(38)