1031
 

25. இலக்கணாத் திரயம்(மும்மை இலக்கணை)

2524. விட்ட விலக்கணை தான்போம் வியோமத்துத்
தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்
சுட்டு மிலக்கணா தீதஞ் சொரூபமே.

(ப. இ.) 'இலக்கணை என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருட்குத் தந்துரைப்பது; அது விட்ட விலக்கணை, விடாத விலக்கணை, விட்டும்விடாத விலக்கணை என மூவகைப்படும், 'நெஞ்சினைச் சென்றது என்று கூறின் விட்ட விலக்கணையாகும். புளித்தின்றான் என்பது விடாத விலக்கணையாகும். 'பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி' விட்டும் விடாதவிலக்கணையாகும். மேலவற்றை வரும் வெண்பாவால் நினைவுகூர்க:

ஒன்றன் இலக்கணமற் றொன்றற்கீந் தீங்குரைத்தல்
நின்ற இலக்கணையாம் நேர்மூன்றாம் - ஒன்றதுதான்
விட்ட விடாதவிட் டும்விடாத சென்றதுகொல்
ஒட்டுபுளி பாயிருள்மூன் றோர்.

ஆருயிர் அறிவுப் பெருவெளியாம் நுண்ணிய வியோமத்துட் போதல் விட்ட விலக்கணையாம். ஆருயிர் என்றும் அறிவுப் பெருவெளியின் தாங்குதலிற்றான் நிற்கின்றது. அது 'போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியன்' சிவபெருமான் என்னும் செந்தமிழ்மறை முடிபினான் உணரலாம். அவ்வுயிரைப் போதல் போலக் கூறியதனால் விட்ட இலக்கணையாம். அவ்வுயிர் செயலற்றொடுங்குவதாகிய ஒழிவிலொடுக்கம் உபசாந்தம் எனப்படும். அதன்கண் அவ்வுயிர் தொகும் என்றல் விடாத இலக்கணையாகும். புளித்தின்றான் என்பது மரத்தை விட்டு அம்மரத்தின் தொடர்பாய பழத்தைக் குறிப்பதுபோல் செயலற்றொடுங்குவதென்பதும் நிலையிலாப் பொருளாகிய வுலகியற் செயலற்று நிலையுடைப் பொருளாகிய சிவச் செயலுற்று ஒடுங்குவது என்பதைக் குறிப்பதாகும். அதனால் இது விடாத விலக்கணையாகும். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் புலன்களை அவ்வுயிர் செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் பொறிகள் வழியாகக் கொள்ளுவது விட்டும்விடாத இலக்கணையாம் ஞாயிறு இருளைப் போக்குவதும் ஒளியை ஆக்குவதும் செய்கின்றது. ஆனால் இருளைப் பருகுவதும் ஒளியைக் காலுவதும் இல்லை. பருகுவது - குடிப்பது. காலுவது - கக்குவது. அதுபோல் ஆருயிரும் ஓசை முதலிய புலன்களுக்குரிய பொருளையோ, புலனையோ பற்றுவதில்லை. பொருள்கள் வழியாக வரும் புலன்களை இறுப்பு மெய்யாகிய புத்திதத்துவம் ஏற்று ஆருயிரின் உணர்வின்கண் இன்பத்துன்ப நிழலாய்த் தோன்றுமாறு செய்யும். செய்யவே அவ்வுயிர் இன்ப துன்பத்துழலும். உழலும் எனினும் அழுந்தும் எனினும் அனுபவிக்கும் எனினும் ஒன்றே. இஃது 'ஈத்து உவக்கும் இன்பம்' போன்றதாகும். இது விட்டும் விடாத இலக்கணையாகும்.இம்மூன்றற்கும்