மதிக்கப்படுமல்லவா? அஃதும் ஒப்பாகும். நீங்காநினைவுடன் திருவைந் தெழுத்தினை நினைவார் ஓங்கும் செந்நெறிச் செல்வராவர். அத்தகையார் திருவுள்ளத்தின்கண் சிவனும் வெளிப்பட்டருள்வன். திருவருளால் உள்ளந்தெளியக் 'கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகிளத்தல்' என்னும் முறையான் தெளியவல்ல நற்றவத்தார்க்குச் 'சிந்தையினுள்ளே சிவன்' எழுந்தருளி வெளிப்பட்டு வீற்றிருந்தருள்கின்றனன். (1) 2810. வாக்கு மனமு மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்று மில்லை வரவில்லை கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்கட்கே. (ப. இ.) மாற்றம் மனம் கழியநின்ற மறையோனாகிய சிவபெருமானை வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் என்றோதினர். திருவருளால் அவனை நோக்குங்கள். அவன் நோக்கப்படும் நுண்ணிய பொருளாவன். அவன் இடம்விட்டு இடம்பெயரும் போக்குவரவுகள் இல்லாதவன். அவன் என்றும் ஒன்றுபோல் நின்றுநிலவும் மன்றவாணன். பிறப்பும் இறப்புமில்லாச் சிறப்பினன். அதனால் கேடில்லாதவன் என ஓதினர். அத்தகைய அத்தனைத் திருவருளால் ஆய்ந்து உளங்கொண்டு திருவடியுணர்வில் திளைப்பார்க்கு அதுவே ஆக்கமாகிய பிறவிப் பயனாகும். (2) 2811. பரனாய்ப் பராபர னாகியப் பாற்சென்று உரனாய் வழக்கற வொண்சுடர் தானாய்த் தரனாய்த் தனாதென வாறறி வொண்ணா அரனா யுலகில் அருள்புரிந் தானே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் மேலோனாயுள்ளான். மேலோர்க்கும் மேலோனாயுள்ளான். மெய்களனைத்திற்கும் மேற்சென்றவன். இயற்கைப் பேரறிவும் பேராற்றலும் வாய்ந்த உரனாய் உள்ளவன். ஏனைய வொளிகளெல்லாம் வழக்கற்று ஒழிந்து மங்கிய காலத்தும் வழக்கறுதலும் மங்குதலும் இன்றி என்றும் ஒன்றுபோல் வழக்கறா ஒண்சுடர் தானாய் உள்ளவன். தானாய் என்பது இயற்கையாய் என்பது பொருள். எல்லாவற்றையும் ஒருங்குதாங்கும் ஆறறிவுகளாலும் அறியவொண்ணா அரனாகவுள்ளவன். இவ்வகையாக இயைந்துநின்று இன்னருள்புரிந்து இடையறாது ஓம்புகின்றனன். ஆறறிவு: ஐம்புலனும் இறுப்புமெய்யும் கருவியாகக் கொண்டறிவது. இறுப்பு - புத்தி. "ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே ஆறறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே." (தொல். பொருள்-மரபு - 27.)
|