தன்மையில் அவ் விரண்டும் பெறுவானும் பேறுமாய் நிற்கும். பெறுவான் - சிற்றுயிர்; பேறு - பேருயிர். அதனால் ஆவியும் சிவனும் திருவருளால் வேறற நின்றும் இரண்டும் ஒன்றுகூடும். அக் கூட்டத்தின் உண்மையினை உணர்ந்தார் ஒன்றாயினோராவர். அவர்க்கு ஒன்றும் இரண்டும் வெவ்வேறாகவே இருந்தால் ஒருகாலத்தும் அவை ஒன்றுகூடா என்னும் உண்மை நன்கு புலனாகும். ஒன்றிரண்டு என்று பேசப்படுவோர்க்கெல்லாம் ஒன்றிரண்டாகவே நிற்கும். திருவருளால் சிற்றுயிரும் பேருயிரும் ஒன்றெனலும் இன்றி இரண்டெனலும் இன்றி இரண்டற்கும் பொதுவாய்ப் புணர்ந்து வேறற நிற்கும் மெய்ம்மை விளங்கும். இதுவே ஒன்றோடொன்று கூடிப் பெறுவானும் பேறுமாய் வாழ்வதொரு பெற்றியாகும். இதுவே செம்பொருட்டுணிவினர் கொள்ளும் சிறந்த திருவடிப் பேறாகும். மேலும் இதுவே சிவப்பணியுமாகும். சிவபெருமான் ஒருவனே உயிரென வேறுபட்டு நின்று பின்னர்க் கூடி ஒன்றாகுமென்று கூறுவோமானால் அவ்விடத்துப் பெறுவானாகிய உயிரில்லை; பேறுதருவோனாகிய சிவன் இல்லை. உயிர்கள் வெவ்வேறாகவே நின்று சிவத்துடன் கூடிச் சிவமாய் விடுமெனில் பெறுவானில்லை. உயிர்களும் சிவமும் வீடுபேற்றின்கண்ணும் வெவ்வேறாகவே இருக்கும் எனின் பேறில்லை. தீயினைச் சார்ந்த இரும்புபோல் இருக்குமெனின் உயிர்கள்மாட்டும் ஐந்தொழில் காணப்படுதல் வேண்டும். அங்ஙனம் காணப்படுமாறில்லை. இவையனைத்தும் ஒவ்வாமையான், கட்டில் ஆணவத்துடன் வேறற நிற்பதுபோல் ஒட்டில் சிவத்துடன் வேறற நிற்கும். இது 'பேதமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க, நோதக்க நட்டார் செயின்.' (85) என்னும் செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க."ஒன்றே உயிராகி ஒன்றிற்பெறு வான்பேறில் நின்றீர்சேர்ந் தொன்றேல் பெறுவானில் - ஒன்றலின்றி வெவ்வேறேல் பேறின்றாம் வெப்பிரும்பேல் செய்கையில்லை செவ்வொப்பில் காணவச் சோப்பு." இதனை நினைவுகூர்க. (அ. சி.) ஒன்று இரண்டாகி - சிவத்தொடு வேறாகி. ஒன்றாயினோர் - சிவத்தோடு கலந்தவர். ஒன்றும் இரண்டும் - மும்மலம். ஒன்றோடொன்று - துவிதம். (11) 2040. உயிரது நின்றால் உணர்வெங்கு நிற்கும் அயரறி வில்லையா லாருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும் பயிருங் கிடந்துள்ளப் பாங்கறி 1யாரே. (ப. இ.) உயிர்ப்பும் உயிராகாவாம். உயிர்ப்பு ஆகிய உயிர் நின்றால் அவ் வுடற்கண் உணர்வு எல்லாவிடத்திலும் நிகழ்தல் வேண்டும். நினைப்பும் மறப்பும் உண்டாகா. உடலும் கீழ்விழாது. ஆகையால் உயிர்ப்பும் உடலும் ஒற்றுமையுற்று வாழும் வாழ்வு சிவபெருமானின் திருவுள்ளப்பாங்காகும். அவ் வுண்மையினைப் பலரறியார்.
1. கண்டறியு. சிவஞானபோதம், 3. 5 - 1.
|