1131
 

(ப. இ.) கொடும் பிறவிக்கஞ்சிப் பற்றைவிடும் வேட்கையுடன் வரும் மெய்யன்பர்கட்கு விரும்பித் தங்குமிடம் சிவானந்தமாகிய திருவடிப்பேறேயாம். அச் சிவானந்தம் உணர்வினின் உணவு என உண்டார்க்குச் செயலறுதலாகிய உன்மத்தம் கை கூடும். எல்லாராலும் கொண்டாடப்படும் தில்லைச் சிற்றம்பலத்தினுள் சிவபெருமான் புரியும் திருநடனத்தைக் காதலித்துக் கண்டார்க்கு வரும் கணக்கிலாப் பேரின்பப் பண்பு சொல்லக் கேட்டார்க்கும் ஒப்பக்கிடைத்துப் பேரின்புறுத்தும். செயலறுதல் - உலகை மறத்தல்.

(அ. சி.) உன்மத்தம் - உலகை மறந்திருக்கும் நிலை.

(18)

2734. அங்கி தமருகம் அக்குமா லைபாசம்
அங்குசஞ் சூலங் கபால முடன்ஞானந்
தங்கு பயந்தரு நீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநட மாடுமே.

(ப. இ.) சிவபெருமான் திருக்கூத்துப் புரியுங்கால் கைக்கொள்ளும் பொருள்களும் துணையும் வருமாறு: மழு, உடுக்கை, சிவமணி, கயிறு, தோட்டி, முத்தலைவேல், நான்முகன் மண்டையோடு முதலியன. துணையாக விட்டுப்பிரியாது திருவடியுணர்வாகிய அழியா விழுப்பயனைத் தந்தருளத் தங்கும் நீலத் திருக்கடைக்கண்ணுடன் எழுந்தருளியிருக்கும் மங்கையினை ஓர் உடம்பின்கண் ஒப்பில் ஒரு கூறாகக்கொண்டு மாநடம் புரிகின்றனன் சிவன்.

(அ. சி.) நீலமும்முடன் - நீல விழிகளோடுங் கூடிய.

(19)

2735. ஆடல் பதினோ ருறுப்பும் அடைவாகக்
கூடிய பாதஞ் சிலம்புகைக் கொள்துடி
நீடிய பாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறமகத் தானன்றே.

(ப. இ.) சிவபெருமான் முறையாக ஆடலுக்கு வேண்டிய பதினொரு உறுப்பும் குறைவில்லாமல் நடித்தருளுகின்றனன். திருவடிக்கண் மறைச்சிலம்பும், திருக்கையிற் கொள்ளும் உடுக்கையும் என்றும் பொன்றாது நின்று ஓம் எனும் துன்றிய ஒலியினை நன்றாக ஒலிக்கும். 'மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய' இயற்கை உண்மை அறிவு இன்பவடிவத்தே நின்று திருக்கூத்தருளுகின்றனன். அத் திருக்கூத்துப் புறமாகிய அண்டத்துள்ளும் அகமாகிய உடம்பினுள்ளும் அவனருளால் ஓவாது இயற்றப்படுகின்றன. உடம்பு - பிண்டம்.

"கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைதுடிமா லல்லியமல் கும்பம் - சுடர்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து."

(சிலப்பதிகாரம், 3. அரங்கேற்றுகாதை, மேற்கோள்.)

எக்கூத்து எவரால் ஆடப்படினும் அவை யனைத்தும் சிவபெருமான் திருவருளேயாம்.

(20)