1214
 

மாய்த்தற்பொருட்டு மாயாகாரிய உடம்பினை எய்தின. எய்திப் புணர்வு நிலையையடைந்தன. அடைந்து மயக்கமுற்றன. புணர்வு - சகலம். இம் முறையால் அவ் வுயிர்கள் தம்மையும் தம்மைவிட்டுப் பிரியாது உடனின்று செலுத்தும் தலைவனையும் மறப்பதுவே தொழிலாகி உழல்கின்றன. அத்தகைய மறப்பிற்கு ஏதுவாய மாயாகாரிய உடம்பினையே அவ்வுயிர்கள் பெற்றிருக்கின்றன. அதனால் 'மாயநன் நாடன்' என்றனர். என்றும் பிறவாப் பெருமைசேர் முழுமுதல்வன் சிவன். அவன் பேரருளையும் உடையவன். பேரின்பப்பெருவாழ்வாம் சிறப்பினையுடையவனும் அவனே. பேரறிவுப் பெருந்திருவாம் திருவருளம்மையையுமுடையவன். அம் மங்கையும் தானுமாய் ஆருயிர்களின் யோகநிலையில் ஏற்படும் உறக்கமில்லாத பேரின்ப நுகர்வில் அச் சிவபெருமானும் அவ் வுயிர்களுடன் உடனாய் நின்று கண்டு காட்டும் பண்டைப் பண்பாளனாகலின் தானும் உடன் உறங்கிடுவன் என்க. ஈண்டு உறங்கிடுதல் நன்றாகத் தங்கிடுதல்.

"பிறவாப் பெருந்தெய்வம் பேணுசிவன் ஏனோர்
பிறப்பால் சிறுதெய்வம் பேசு"

என்பதனை நினைவுகூர்க. மேலும்,

"கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை இறப்பொடு பிறப்பி லானை
பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே."

(4. 74 - 3)

என அப்பரருண் மொழியினையும் நினைந்தின்புறுக.

(அ. சி.) மறப்பது வாய் - மறப்பதுவே தொழிலாய். மாய நன்னாடன் - மாயா சரீரத்தை உடையவன். திருமங்கை - திருவருட் சத்தி. உறக்கமில் போகம் - சிவயோக சமாதி. உறங்கிடும் - அமைந்திருப்பான்.

(3)

2899. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதில்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி யுமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே.

(ப. இ.) ஆருயிர்ச் செயலறல், அருட்செயலறல், அருளோன் செயலறல் என்னும் மூன்றும் முத்துரியம் என்ப. இம் மூன்று நிலையினையும் கடந்து ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் பேரொளிப்பிழம்பு சிவன். அம் மூன்றன் அப்பால் நிலையாகிய துரியாதீதமும் மூன்றாம் என்ப. அந்நிலைக்கண் ஆருயிர்க்கு விரிவு குவிவாகிய நினைப்பும் மறப்புமுண்டாகா. விழுங்கி உமிழ்தல் என்பது கொண்டும் ஒழிந்தும் வருதலில்லாத சொற்கழிவாகிய பேரின்பநுகர்வு நல்லார்தம் நுகர்வுணர் வாகுமேயன்றி வேறன்று. நுகர்வுணர்வு - அனுபவம். அந் நுகர்வுணர் வின்கண் நுகரின்பமாய்ச் சிவபெருமான் நீங்காதுறைந்தருள்வன்.

(அ. சி.) துரியங்கண் மூன்றும் - சீவதுரியம். சீவதுரியம் - பரதுரியம். அதன்மீது மூன்றாய் - சீவ, சிவ, பரதுரிய அதீதங்கள். விரிவு குவிவு - நினைப்பு மறப்பு. விழுங்கி உமிழ்ந்து - ஒழித்து. உரையில் - சொல்ல இயலாத. அநுபூதிகம் - அனுபவம்.

(4)