படுவர். பல திசைகளிலும் திருவடியுணர்வு கைவந்த நல்லோர் மாண்பினைக் கண்டும் கேட்டும் தேறார். இவர்கள் உய்யும் அறிவிலராவர். திருவடியுணர்வுத் திருமுறை கற்றபின் அதன்படி ஓவாது ஒழுகிக் கண்ணுதலோன் அன்பினில் உறுதியாக நிற்போரே கணக்கறிந்தாராவர். வீடார் - விட்டு நீங்கார். கணக்கு - முறைமை. (அ. சி.) கலதிகள் - வீணர்கள். துரிசு - களங்கம். (9) 306. ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற சோதி நடத்துந் தொடர்வறி யாரே. (ப. இ.) யாவர்க்கும் யாவைக்கும் காரணமாய்த் திகழும் ஆதியையுடைய அப்பன் விழுப்பொருளாகிய பிரானாவன். அவனே விண்ணவர்க்கும் பண்ணமை அறிவுப் பேரொளி. திருவருள் ஒளியோடு என்றும் பொன்றாப் பொலிவுடன் விளங்குவர் மெய்யடியார். அவர் நன்று தொடரும் பெருந்தெய்வம் சிவபெருமானே. இவ்வுண்மைகளை அருளால் உணராதவர் தாமே ஓதியுணரவல்லோம் என்று செருக்குறுவர். அவர்கள் சிவபெருமான் உயிர்க்குயிராய் உள்நின்று நடத்தும் அருட்பெருஞ்சோதியாம் முறைமையினை அறியாதவராவர். சோதி அடியார்த் தொடரும் - திருவடியுணர்வுள்ள நாயன்மாரைத் தொடர்ந்து முன்நிற்கும், பெரும்பொருள் - சிவபெருமான். தொடர்வு - முறைமை. பெரும்பொருள் சிவபெருமான் என்பது நடு நின்று ஆய்வார் அனைவர்க்கும் என்றும் ஒப்ப முடிந்த தொன்று. அவன், கரும்பினுமினியான், கதிர்ச்சோதியான், கடலமுதன், இறப்புப்பிறப்பு இல்லான், பெரும்பொருட் கிளவியான், அரும்பொன் ஆக்குவோன் ஆவன் இதன் கண் காணப்படும் சிவனியல்பு ஆறும் அவன் பண்பு ஆறனையும் ஒரு புடையாகக் குறிக்கும். பண்பாறு: அழிவில் செல்வம், ஆண்மை, பொருட் புகழ், அருட்செல்வம், அடியுணர்வு அற்ற பற்று என்பன. இச்சிறப்பனைத்தும் ஒருங்குமைந்த செந்தமிழ்த் திருமறை வருமாறு: 'கரும்பினு மினியான்றன்னைக் காய்கதிர்ச் சோதியானை இருங்கட லமுதந் தன்னை யிறப்பொடு பிறப்பிலானைப் பெரும் பொருட் கிளவியானைப் பெருந்தவ முனிவரேத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்தவாறே.' - அப்பர், 4.74 - 3. (அ. சி.) பெரும்பொருட் கிளவி - திருவைந்தெழுத்து. (10)
|