63
 

144. செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

(ப. இ.) நன்னெறியில் ஒழுகும் ஒழுக்கத்தால் திருவடியுணர்வு கைவரப் பெறும். அவ்வுணர்வால் நினைப்பில் தோன்றும் சித்தசன் என்னும் கருவேளை முனிந்து வெல்லுதல் கூடும். அவர்களே மிக்கோராவர். அவர்கள் சிவ முனிவர்கள் என்று அழைக்கப்படுவர். முனிவர்களாகவும் தேவர்களாகவும் அசுரர்களாகவும் மக்களாகவும் நாளும் வளர்ந்து பெருகும் இத் திறத்தார்மாட்டு நுண்ணிய வான் வழியாக அருள்துணைக் கொண்டு வந்தனன். சிவமுனி - சிவமுன்னி: சிவனடியினை நினைந்து. சித்தசன் - மனத்தில் பிறப்பவன். ஒல்கின்ற - நுணுகுகின்ற.

(10)

145. சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

(ப. இ.) சிவபெருமான் திருவருளால் திருவடியுணர்வு கைவரப்பெற்ற மெய்கண்ட மேலோர் உள்ளத்தில் அமையும் நூல்களில் தலைமையாக இறைவன் எழுப்ப முறையாக எழுந்து ஓதப்பெறும் ஒண்தமிழ் மறைமுறையாகிய முன்னை வேதாகமங்களை யொப்பச் சொல்லையும் பொருளையும் அடியேற்கு உள்நின்று அத்தன் அருளால் உணர்த்தியருளினன்.

(அ. சி.) உடல் - சொல் - உற்பத்தி - பொருள்.

(11)

146. நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ஆய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே.

(ப. இ.) திருவடிப் பேற்றிற்கு நேர்வழியாயுள்ள நான்கினுள் நேர்ந்திடும் அடிப்படைச் சீலம் என்னும் சரியை நெறி இத் தன்மைத்தென்று ஆய்ந்தவர் கந்துரு காலாங்கிமுனிவரும், கஞ்சமலையமான் முனிவரும் என்க. அவ்விருவர்களையும் நோக்கித் திருமூலர் அருளுகின்றனர். இச் சீலம் இந் நிலவுலகத்துத் தனி முதற் சிவனெறியாகிய சுத்த சைவத்துக்கு ஆராய்ந்து கடைப்பிடிக்கும் உயிராம் என்க. உயிர் - நானெறித்தொண்டு.

(12)

147. நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.