அடியேன் உள்ளத்துள் மறைந்து நின்றருளினன். செவ்வி வருதலும் 'தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தல்' தமிழ்த்தகவாதலால் வெளிப்பட்டு வந்து தலையளி புரிந்தருளினன். அவன் அவ்வாறு மறைந்து நிற்பதற்குக் காரணம் பிறப்பு இறப்பில் மீண்டும் மீண்டும் உட்படுவார் கள்ளப் பெருமக்கள் ஆவர். சொல்லுறுதி யின்மையும் சொல்வழி வாராமையும் உடையாரைக் கள்ளரென்பது உலகியல் வழக்கு. இது மேலதனை வலியுறுத்தும். அத்தகைய கள்ளர்கள் காண்பார்களோ என்று ஒளித்து நிற்பன் ஒளிக்கெலாம் ஒளிகொடுத்து உலப்பின்றி ஒளிரும் ஒண்மையோனாகிய சிவபெருமான். இக் குறிப்பு 'விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்' என்னும் செந்தமிழ்த் திருமறை முடிவான் உணர்க. (12) 2952. ஆளும் மலர்ப்பதந் தந்த கடவுளை நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்குங் குரிசிலின் வாளு மனத்தோடும் வைத்தொழிந் தேனன்றே. (ப. இ.) மெய்யடியார்களையும் வையத்தாரையும் திருவுள்ளத் திருக்குறிப்பான் நோக்கி ஆண்டருள்பவன் சிவபெருமான். அத்தகைய கடவுள் திருவடித் தாமரையைத் தந்தருள்வன்: அவனை அகனமர்ந்த அன்பினராய் முகனமர்ந்த மொழியினராய் நற்றமிழ் மறையால் நாளும் வழிபடுதல் வேண்டும். அங்ஙனம் வழிபடுவோர் நன்மையுள் நின்றவராவர். அவர்தம் தீப் பண்பையும், தீத் தொழிலையும் அகற்றி யருளும் குரிசிலாகிய அண்ணல் சிவபெருமானே. அவன் வாளாகிய கண்ணினுள்ளும் மனமாகிய கருத்தினுள்ளும் வாளாது வந்தருள்வன். அங்ஙனம் வந்தருளுமாறு உறுதியுடன் ஓவாதுளத்தமைத்துவைத் தடங்கினன். இனிக் கோளும் வினையும் என்பதற்கு நாளும் கோளும் எனவும், பகைவரான் வரும் வினை எனவுங்கொண்டு வழிபாட்டு மெய்யடியார்க் கடியாரையும் அவை துன்புறுத்தா என்றலும் ஒன்று. இவ் வுண்மை வரும் ஆளுடைய அடிகள் திருநெறிய தமிழானும் உணர்க: "காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் நீளமாய்நின் றெய்த காமனும் பட்டன நினைவுறின் நாளுநாதன் னமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் கோளும்நாளும் தீயவேனு நன்காங் குறிக்கொண்மினோ." (2. 119 - 6.) (அ. சி.) நன்மையுள் - சன்மார்க்கத்தில். கோளும் வினையும் - தீக் குணத்தையும், தீத்தொழிலையும். குருசில் - சிவன். வாளும் மனத்தொடும் - கண்ணையும் மனத்தையும். (13) 2953. விரும்பில் அவனடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவனடி புண்ணிய லோகந் திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும் வருந்தி யவனடி வாழ்த்தவல் லார்க்கே.1
1.அண்ணல். 12 - திருமலைச் சிறப்பு. 2.
|