10. அறஞ்செயான் திறம் 117. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம் வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே. (ப. இ.) 'நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று' என்பராகலின், எட்டி மரங்கள் பழுத்துப் பெரும் பெரும் பழங்கள் வீழ்ந்தன. ஆனால் அஃது பயன்படாமையினால் ஒருவராலும் தொடப் படுவதில்லை. அதுபோல் நல்லறஞ் செய்யாதார் செல்வமும் ஒருவர்க்கும் பயன்படுவதின்று. பொன்னாசையினால் கடும் வட்டி வாங்கி மிகுபொருள் ஈட்டியதோடமையாது வஞ்சனையால் பிறர்பொருள் கவரும் பாதகர், தாம் செய்ய வேண்டிய அறத்தினையுமுணரார். தவிர வேண்டிய பாவத்தையுமுணரார். அவற்றினான் விளையும் பயனையும் அறியார். பாதகர் என்பது பதகர் எனக் குறுகி நின்றது. (அ. சி.) இருங்கனி - பெரும்பழம். ஒட்டிய - தானே நேர்ந்த. மண்ணின் முகந்திடும் - எட்டிப் பழம்போல் பயனின்றிக் கெடும். பட்டி - வஞ்சனை. பதகர் - பாதகர். (1) 118. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. (ப. இ.) நாழிகை, சிறுபொழுது, நாள், திங்கள், பெரும்பொழுது, ஆண்டு முதலியவாகக் கணக்கிடப்படும் காலங்கள் பல நீங்கின. உலக முடிவாம் ஊழிகளும் பலவாயின என்ப. 'ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப, கோடியுமல்ல பல' என்பதுபோல அளவின்றி எண்ணிய வீண் எண்ணங்களும் அகன்றன. வரையறுத்த நாளும் நெருங்கி அது காரணமாகச் சாறு பிழிந்த நறுவிய கனி கரும்பு முதலியவற்றின் சக்கை போன்று யாக்கையும் பயனற்று அழிந்தன. இங்ஙனம் நிகழ்வன பலவும் கண்டும் அறம் செய்யவேண்டுமென்னும் அரும்பெரும் திறமறியா மாந்தர் பலராவர். (அ. சி.) கற்பனை - வீண் எண்ணங்கள். பிழிந் . . . அழிந்தன - இரசம் பிழியப்பட்ட கனிபோல் சத்துக் கெட்ட யாக்கை. (2) 119. அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந் திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு மறம்அறி வார்பகை1 மன்னிநின் றாரே. 1. (பாடம்) வார்வகை. " எனைப்பகை. திருக்குறள். 207.
|