2391. பதியது தோற்றும் பதமது வைம்மின் மதியது செய்து மலர்ப்பத மோதும் நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன் கதிசெயுங் காலங்கள் கண்டுகொ ளீரே. (ப. இ.) பதியாகிய சிவபெருமானின் திருவடி யாண்டும் புகழ் மணியொளியாய்த் திகழ்ந்து தோன்றும். அத்திருவடியிணையினைத் தலையிற் சூடுங்கள். செந்தாமரையனைய அத் திருவடியிணையினை மறவா நினைவாக மதியாகிய அறிவினிற் கொள்ளுங்கள். அதனையே இடையறாது ஓதும் செயலை மேற்கொள்ளுங்கள். திருவருள் வெள்ளம் தங்கியிருக்கும் திருச்சடையினையும், பெண்ணமர்ந்திருக்கும் ஒரு பாகத்தினையும் உடையவன் சிவபெருமான்; அவனைப் போற்றும் காலங்கள் நான்கு. அவை செல்வொளிவானக் காலையும், வெள்ளொளி நண்பகலும், செவ்வொளி மாலையும், மையொளி நள்ளிரவு மாகும். இக் காலங்களைத் தொழத்தகும் இன்றியமையா இறைவன் இயற்கையோடொட்டிய திருவுருவ நற்காலமாகத் தொழுங்கள். தொழுதற்கு வேண்டும் திருமுறைத் திருப்பாட்டின் முதல் நினைப்புக்கள் வருமாறு. சிந்திப்பார், காலையே, படைக்கலமா, வாழ்க, என்றும் இன்பம் என்பனவாம். அங்ஙனம் தொழுதால் சிவபெருமான் திருவடிப் பேறாகிய நிலையினை நிலையாக அருள்புரிவன். இந் நாற்காலக் குறிப்பு அம்மையார் அருளிய அருந்தமிழானுணர்க. "காலையே போன்றிலங்கு மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையில் தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு." - 11. காரைக். அற்புதம் - 65. (அ. சி.) பதம் - திருவடி, வைம்மின் - தலையை வைம்மின், மதியது செய்து - சிந்தித்து, மலர்ப்பதன் ஓதும் - திருவடியைப் புகழுங்கள், கதி செயும் - முத்தி உதவும். (6) 2392. தரத்துநின் றானடி தன்னிட நெஞ்சில் தரித்துநின் றானம ராபதி நாதன் கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை பரித்துநின் றானப் பரிபாகத் தானே. (ப. இ.) சிவபெருமானின் திருவடியினைப் பதம் வாய்ந்த விரிந்த மனநிலைக்கண் மாறாது நினையுங்கள். அப்படி நினைவார் மனத்து அவன் நீங்காது தங்கி நின்றருள்வன். தரித்தல் - தங்குதல். இடம் - விரிவு. அவன் இயல்பாகவே எங்கும் தங்கிநின்றருள்பவன். அவன் அனைவர்க்கும் நாதன். அமராபதியாகிய விண்ணவர்கோனுக்கு முதல்வன். கருதாதவரை வெறுத்து நின்றனன். கரித்து - வெறுத்து. சிந்தை சிவமாகச் செய்தனவே தவமாகத் திருவருளால் செவ்வி வாய்க்கும். செவ்வி - பரிபாகம். பரிபாகமுற்றாரைச் சிவன் தாங்கி நின்றனன். (அ. சி.) அமராபதி நாதன் - இந்திரன். கரித்து - வெறுத்து. பரித்து - தாங்கி. (7)
|