249
 

(ப. இ.) புள்ளாகிய பறவையினும் மிக்க விரைவாகச் செல்லும் குதிரையினைச் சிவகுருவினருளால் மேற்கொண்டால் புறத்தே காணப்படும் கள்ளுண்டு களிப்பெய்துதல் வேண்டா. (319) தானே அகத்தின்கண் அளவில்லாத களிப்புண்டாகும். மேற்கொள்ளுதல் - அடக்குதல். உயிர்ப்புப் பயற்சியுடையாரைத் துள்ளிநடக்கும் பீடுசேர் நடையினராக்கும். சோம்பல் வராமல் தடுக்கும். திருவடியுணர்வு கைவரப்பெறும் செந்நெறியாளர்க்கு மெய்ம்மை எடுத்துரைத்தனம். குதிரைக்கு ஒப்புப் பள்ளென ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியரும் அருளினர். அது வருமாறு.

"வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை
உள்ளம் போல வுற்றுழி யுதவும்
புள்ளியற் கலிமா வுடைமை யான."

- தொல். பொருள் : 194.

கலிமா - குதிரை.

புள்ளென்பது ஈண்டுப் பறவைப் பொதுவன்று. பறவையின் ஓர் இனம் புள்ளெனப்படும். அப் புள் முட்டையினின்றும் வெளிவந்த அப்பொழுதே பறக்கும் இயற்பண்பு வாய்ந்தது. அஃது ஈண்டைக்கு நனிமிகு பொருத்தமாகும். ஆருயிரும் நிலத்தில் பிறந்ததும் ஏதொரு துணையும் இன்றித் தாமாகவே மூச்சுவிட்டு வாங்குகின்றதைக் காண்கின்றோமன்றோ? ஆதலால் முட்டையினின்றும் வெளிவந்தவுடன் பறக்கும் புள்ளே ஒப்பாகும். இவ் வுண்மை தேர்ந்து தெளிந்தே திருவள்ளுவநாயனாரும்,

"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு."

- 338.

என்று ஓதியருளி முட்டையினின்றும் வெளிவந்தவுடன் பறந்துபோகும் புள்ளே உடம்புடன் வந்தவுயிர் அவ் வுடம்பைவிட்டுப் போவதற்கு ஒப்பாகும் என ஓதியருளினர். நிலாமுகிப்புள், தளியுணவப்புள் முதலியவை போன்று வியத்தக்க இயற்கைவாய்ந்த முட்டையினின்றும் வெளிவந்ததும் பறக்கும். பண்பினவாய புள்ளொன்று உளதெனக் கோடலும் பொருந்தும். நிலாமுகிப்புள் - நிலவை உணவாகக்கொள்வது. தளியுணவுப்புள் - மழையை உணவாகக் கொள்வது. இதனை வானம்பாடியெனவும், சாதகப்புள் எனவும் கூறுப. இவ் வுண்மை வருமாறு:

"வானம் பாடி வறங்களைந் தானா
தழி துளி தலைஇய புறவிற் காண்வர
வானர மகளோ நீயே
மாண்முலை யடைய முயங்கி யோயே."

- ஐங்குறுநூறு, 418

புள்ளினுமிக்க - வேகத்தால் பறவையினும் சிறந்த. மேற்கொண்டால் - அடக்கிக்கொண்டால். துள்ளி நடப்பிக்கும் - நடனமிட்டு நடத்தலைச் செய்விக்கும். சோம்பு - மடி.

(அ. சி.) புள் - பறவை. புரவி - பிராணவாயு.

(3)