28
 

66. ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்1
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

(ப . இ.) அறுவகைச் சமயங்களையும் ஆறங்கங்களாகக் கொண்டு திகழும் தமிழ் மாமறையினை ஓதியருளிய சிவபெருமானை மண்ணகத்தார் உய்யப் பெண்ணொரு கூறாகத் திகழும் அவன்தன் பேரருட் குணத்தைத் திருவடியுணர்வோடு ஓதியுணர்வார் இல்லை. இவ்வுண்மை தொன்மையது, நன்மையது, மென்மையது, அழியாவிழுமியது, முழுமையது என உணராது அயன்மொழி அங்கங்களையும் வேதங்களையும் அவையே பேறெனக் கொண்டு பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்குகின்றார்கள்.

(அ. சி.) ஆறங்கமாய் வருமாமறை - ஆறு அங்கங்களோடு கூடிய தமிழ்மறை. கூறங்கமாக - மாதொருபாகனாக. மாட்டாதார் - தமிழ் வேதம் ஆரிய வேதங்களைப் பிரித்து அறிந்து கொள்ளமாட்டாதார்.

(6)

67. பாட்டும் ஒலியும் பரக்குங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலலுற் றாரே.

(ப. இ.) செந்நெறிக்கண் பரந்து தென்னாடு எங்கணும் தொன்னாள் தொட்டுச் சிவவழிபாடாகச் செய்து வரும் செந்தமிழ்ப் பாட்டும், ஏனை இசையொலியும், இவற்றுடன் இணைந்த சிவகணிகையர் சிவபெருமானின் முழுமுதல் தன்மையை விளக்கிக் காட்டி ஆடும் ஆட்டமும் ஒருகாலமும் நீங்காத தமிழகத் தனிப்பண்புகளை ஏற்றுக்கொள்ள மாட்டாதார் புலை வேள்வி விருப்பினராய் ஒன்றாக நல்லது கொல்லாமை என்னும் சிறந்த நோன்பாகிய விரதமில்லாதாராய்க் கொலை வேள்வி செய்வர். அவ் வேள்விப்பயன் நுகரும் துறக்கவுலகத்துச் சென்று மாலும் அயனும் போல் ஒருவரோடொருவர் முரணிச் சண்டையிடுவாராயினர். ஈட்டுமிடம் - பயன் நுகருமிடம்.

(7)


1. மலையினார். சம்பந்தர், 1. 76 - 9.