1153
 

ஆருயிர்ச் செயலறல், அருட்செயலறல், அருளோன் செயலறல் என முப்பாழ் கூறுவர். இவற்றைச் சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் எனவும் கூறுப. இவையனைத்தையும் எப்பாழும் என்று ஓதினர். பின்னர்க்கூறும் பாழ், காரணமாயையைக் கூறுவதாகும். ஆங்காங்குள்ள உயிர்களும் பொருள்களும் ஆகிய அனைத்துடனும் கலந்து கலப்புத் தன்மையால் அவையேயாய் நிற்பன் சிவன். அவனே பொருட்டன்மையால் அன்றாகி நிற்பன். மேலுள்ள முப்பாழ் என்பது அருட் செயலறலாகிய பரதுரியத்தில் நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்று பாழாகும். இம் மூன்றும் நிகழாமையே ஈண்டுப் பாழென்ப. அவற்றை அபாவம் என்பர். இவை தொகை என்னும் சமட்டியாகும். கீழுள்ள முப்பாழ் ஆருயிர்ச் செயலறலாகும். அவை சீவதுரியம். அதன் கண்ணும் நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்றும் நிகழாமை பாழென்ப. இவற்றை வகையென்னும் வியட்டி என்ப. இவற்றைப் பொருந்தி இவற்றையும் கடந்து இன்னவாறென்று எவராலும் கூறவொண்ணாதாகியுள்ள நிலையின்பத்தினையுடையதாய்த் தானே முழுமுதலாய் உண்மை அறிவின்ப உருவுடையதாய் விளங்குபவன் சிவபெருமான். அவனே புணர்ப்பால் ஆருயிர் என்னும்படி நின்றருள்வன்.

(அ. சி.) எப்பாழும்-மாயை சம்பந்தமானவைகளும். பாழ் - மாயை. யாவும்-மாயா சம்பந்தமற்ற பொருள்களும். முப்பாழ்-சுத்தமாயை, அசுத்தமாயை மூலப்பிரகிருதி மாயை. கீழுள்ள முப்பாழ்-பூமியிலுள்ள மண், பெண், பொன் ஆகியவை.

(1)

2783. மன்னுஞ் சத்தியாதி மணியொளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடலொன்றா மாறது
இன்னிய வுற்பலம் ஒண்சீர் நிறமணம்
பன்னிய சோபை பகராறு மானதே.

(ப. இ.) சிவத்துடன் பொருந்திய திருவருளாற்றல் சத்தி யெனப்படும். அது மணியொளி போன்று மிக்க அழகினையுடையதாகும். அச்சத்தி மெய்யுணர்வாகும். அவற்றுடன் ஒப்புரைத்தலாகும் பொருள் ஒன்றும் இன்று. இனிமை பொருந்திய கருங்குவளையாகிய வுற்பல மலருக்குத் தூய்மை, சிறப்பு, நிறம், மணம், அழகு உள்ளன போன்று சிவபெருமானுக்கும் ஐவகையாற்றல்களும் உண்டாகும். அவற்றொடும் கூட அழகிய பொருள்கள் ஆறாகும்.

(அ. சி.) சத்தியாதி-ஞானமாதி. சோபை-அழகு. ஒப்பமிடல் - ஒப்புரைத்தல். ஒன்றாமாறது - பொருந்தாத தன்மை இன்னிய - இனிய. உற்பலம் - நீலோற்பலம், கருங்குவளை. ஒண் - ஒண்மை, தூய்மை. சீர் - சிறப்பு. ஆறுமானதே - சிவத்தோடு சத்திகள் உற்பலம் என்றும் மலருக்குத் தூய்மை - சிறப்பு, நிறம், மணம், அழகு போல்வதாம். மலருக்கு 5 குணங்கள் உள்ளனபோல சிவத்துக்கு ஐந்து சக்திகள் உண்டு.

(2)

2784. சத்தி சிவன்பர ஞானமுஞ் சாற்றுங்கால்
உய்த்த அனந்தஞ் சிவமுயர் ஆனந்தம்
வைத்த சொருபத்த சத்தி வருகுரு
உய்த்த வுடலிவை யுற்பலம் போலுமே.