105
 

7. புலால் மறுத்தல்

242. பொல்லாப் புலாலை நுகரும் புலையரை1
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

(ப. இ.) உலகவராலும் உயர்ந்தோராலும் உண்பார்க்கமைந்த உறுப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையாதது பொல்லாப் புலால். அப் புலாலை விரும்பியுண்ணும் மக்கட் பிறப்பினை இழிவாம் கொடு விலங்கினும் இழிவாகப் பேசுவர். அப் புலையர்களை அத்தகையார் பலரும் காணும்படி இயமன் தூதுவர் கொண்டுபோவர். கொண்டுபோய் இடிபோல் முழங்கி அஞ்சும்படியாகப் பற்றி என்றும் நீங்காப் பெருந்துன்பம் தரும் கொடிய நரகத்தில் தள்ளுவர். தள்ளி மல்லாக்கக் கிடத்துவர். என்றும் துன்புறும்படி எங்கும் செல்லவொட்டாது தடுத்து நிறுத்துவர். அப் புலால் உண்பவர்க்கு இம்மையிலும் பொல்லாததேயாகும். என்னை? அவ்வூன் நல்ல உள்ளத்தைத் தாராதாகலான் என்க. இவ்வுண்மை உழைப்பால் உடலழகாம் ஊணாலாம் உள்ளம், மழை யொழுக்காலாம் உயிரின் மாண்பு என்பதனாலுணரலாம்.

(1)

243. கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறினார்
தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார்
பன்றி யாப்படி யிற்பிறந் தேழ்நரகு
ஒன்றி வார்அரன் ஆணையி துண்மையே.

(ப. இ.) கொல்லும் கருத்தும் ஆற்றலும் இல்லாதாரைக் கொல்லும்படி சொல்லியும் துணைநின்றும் தூண்டியவரும், அவ்வூனைத் தின்னும் மனமில்லாது அருவருப்புக் கொண்டுள்ளோரை வற்புறுத்தித் தின்னச் செய்தவரும், அப்படியும் தின்னாதவரை ஒறுத்தவரும் இந்நிலத்துப் பன்றியாய்ப் பிறப்பர். பின்பு ஏழ்நரகிடை வீழ்ந்து ஆழ்ந்து துன்புறுவர். இங்ஙனம் அவர் துன்புறுவது அரன்திருவாணையே யாகும். இதுமாறா வுண்மையுமாகும். அயலார் வேள்வியிற் கொன்றுண்ணும் புலாலும் இத்தகையதே. அவ்வுண்மை வரும் செந்தமிழ்மறை முடிபாந்திருவாசகத்தான் உணர்க:

'சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி
ஆவளந் தாயென் றவிதா விடுநம் மவரவரே
மூவரென் றேயெம் பிரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந் திரிதவரே. - 4.

(2)


1. கொலைவினைய. திருக்குறள், 329.