மறைத்தது' எனவும், 'அது பரத்தில் மறைந்தது' எனவும் ஓதியருளினர். இயக்காதியக்கல் - கருத்தாலியக்கல். இவ்வுண்மை வரும் திருவள்ளுவநாயனார் செந்தமிழ்ப் பொதுத் திருமறையான் உணர்க: "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." (திருக்குறள், 355.) மேலும் திருவள்ளுவநாயனாரருளிய "காணுங்காற் காணேன் தவறாய காணாக்கால், காணேன் தவறல் லவை' (1286) என்னும் மறையும் ஒருபுடையொப்பாகக் கொள்க. அப் பொருள் வருமாறு: சிவபெருமானைத் திருவருட்கண்ணால், உணர்வின்கண் நினைவதாகிய காணுங்கால் நிலையாமையாகிய உலகியற் பொருள்களைக் காணேன். சிவபெருமானை நினையாமையாகிய காணாதவிடத்து (எதிர்மறை முகத்தால்) தவறுடையனவாகிய உலகினையே காண்பேன் என்பதாம். தவறு: தோன்றி யொடுங்கும் குற்றமுடைய உலகு உடல் உணா. தவறல்லவை - அக்குற்றம் ஒரு சிறிதும் இல்லாதவன் - சிவபெருமான். இதன்கண் காணப்படும் மெய்ப்பொருளாவது சிவன். அவனே அப் பொருள்களைப் படைத்துக் காத்து உடனாய்நின்று இயக்கியருளுகின்றனன். இவ் வுண்மை அப் பொருளைக் கண்டவுடன் எழுதல். இதற்கு ஒப்புத் திருக்குறளைக் கண்டவுடன் திருவள்ளுவநாயனார் திருவடி நினைவுக்கு வருதல். திருவடி - திருவருள். ஒரு பொருளுக்குச் சார்பினால் பல பெயர்கள் அமையும். அப் பெயர்களனைத்தும் அப் பொருளுமன்று அப் பொருளின் வேறுமன்று. சார்பினால் வரும்பெயர்கள் நிலையா. இயற்பெயர் நிலைக்கும். ஆருயிர்க்கு உயிர்க் கிழவன் என்பது இயற்பெயர். ஏனைப் பருஉடற்சார்பால் வருவன அனைத்தும் செயற்பெயர். செயல் எனினும் சார்பெனினும் ஒன்று. அஃது 'அடிமை' என்னும் படியிலா முடிவிலா ஒப்பிலாத் திருப்பெயராம். செயற்பெயர்க்கு எடுத்துக் காட்டு வருமாறு: 'கோச் சேரமான் யானைக்கண் சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை.' இதன்கண் சாதி, குடி, வடிவு, இயற்பெயர், சிறப்புப் பெயர் என்னும் ஐம்பெயர்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் செயற்பெயர்கள். இவற்றை வரும் வெண்பாவால் நினைவுகூர்க: "சாதி குடிவடிவு சாற்றும் இயல்சிறப்பிங் கீதஞ்சும் சார்பால் இயைவனவாம் - ஓதுங்கால் கோச்சேரன் யானைக்கண் சேய் மாந்த ரம்பொறை பாச்சார்பா லாங்கற் பனை." (22) 2252. ஆறா றகன்று நமவிட் டறிவாகி வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி ஈறார் பரையின் இருளற்ற தற்பரன் பேறார்1 சிவாய அடங்கும்பின் முத்தியே.
1. துன்பாய. சம்பந்தர், 2. 26 -10. " அத்தாவுன். அப்பர், 6. 95 - 8.
|