இவற்றுள் திருவருளால் மலம் அடங்கும். மலம் அடங்கவே சத்தியாகிய திருவருளால் ஆருயிர் கூட்டத் தகுதியுடையதாகும். அப்பொழுது திருவருள் அவ் வுயிரைச் சிவத்துடன் கூட்டுவிக்கும். கூட்டுவிக்கவே வீணாகப் பிறந்திறக்கும் பிழைநெறியிற் புகுவிக்கும் பாசம் (159) அற்றழியும் திருவைந்தெழுத்தின் விரிவினை வரும் வெண்பாவால் நினைவுகூர்க. சிறப்புவனப் பியாப்பு நடப்பு மறைப்போ டுறப்பால ஐந்தெழுத்தின் உண்மை-மறப்பில் சிவய நமஎன்னும் செந்தமிழ்ஐந் தாலாம் சிவமறையின் மெய்விரியாம் செப்பு. (அ. சி.) சிவன்.....மாயை-அஞ்செழுத்துக்கள் ஐம்பொருள்களை உணர்த்துகின்றன. சி - சிவனையும், வ - சத்தியையும், ய - சீவனையும், ந - மலத்தையும், ம-மாயையையும் உணர்த்துகின்றன. அவம் சேர்ந்த பாசம் ஐந்து - பாவத்தை உண்டாக்கும் மலங்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆக ஐந்து. (2) 2661. சிவனரு ளாய சிவன்திரு நாமஞ் சிவனரு ளான்மாத் திரோத மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவம தகன்று பரசிவ 1னாமே. (ப. இ.) செந்தமிழ்த் திருவைந்தெழுத்துச் சிவபெருமானின் திருமேனியாகும். அதனால் அம்மறை திருவருளேயாகும். அது 'சிவயநம' எனப்படும். இத் திருவெழுத்தைந்தும் முறையே சிவன். அருள், ஆன்மா, திரோதம், மலமாயை என்னும் மெய்ப்பொருள் ஐந்தினையும் தனித் தனியாகக் குறிக்கும் (2660) ஐந்து சொற்களின் முதலெழுத்தாகும். சிவ என்னும் மறைமொழியை முதற்கண்வைத்து 'சிவயநம' எனக் காதலாகி நாளும் கணிக்கப்பெறும் நற்றவம் புரிதல்வேண்டும். அது புரிந்தால் அத்தவப் பயனால் மலமாயைகன்மங்கள் அகன்று அடங்கும் அவை அடங்கவே பிறப்பறும். பிறப்பறவே திருவடிப்பேறாம் சிறப்புறும் சிறப்புறவே அவ்வுயிர் சிவனாகி மீளா அடிமையாய் வாழ்ந்திருக்கும். நிரோதம் - ஒழித்தல்; அடக்கம். (அ. சி.) சிவனருளாய - சிவ சத்தியாகிய. சிவன் திருநாமம் - அஞ்செழுத்து. சிவன் - அருள் - ஆன்மா - திரோதம் - மலமாயை - சி - வா - ய - ந- ம -. சிவன் முதலாக - சி முதலாக. நிரோதம் - ஒழித்தல். (3) 2662. ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டவ் வாதி தனைவிட் டிறையருட் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதுஞ் சிவாய மலமற்ற 2உண்மையே. (ப. இ.) மேலோதியவாறு 'சிவயநம' என ஓதிவருங்கால் சொல்லப்படும் நகரமகரமாகிய மலங்கள் இரண்டும் ஒழிந்திடும். ஒழியவே
1. அஞ்செழுத்து. திருக்களிற்றுப்படியார், 25. 2. விண்ணி. அப்பர், 5. 51 - 6.
|