1156
 

தாறாம் மெய்யாகிய ஓசையென்னும் நாததத்துவத்தின்கண் திருவடிவைப்பவன். தமரம் - ஓசை, ஈண்டு நாததத்துவம், ஒப்பில்லாதவன், ஆண்டருளும் அருட்செல்வன். ஆற்றலாகிய திருவருட் சத்தியுடன் பெரும்பொருட்சிவன் கூடியருள்கின்றனன். அதனால் மயக்குடையவனே என்னும் மருளினை நீக்கியருளுகின்றனர். பவழம் போன்ற இதழையும், முத்துப்போன்ற பற்களையும், இனிய மொழிகளையும் உடைய சத்தியாகிய பெண்களுடன் கலந்து நின்றும் புலன்வென்றவன் ஆகின்றான். அத்தகைய மயக்கமில்லாத அறிவுப் பேரொளி. ஆருயிர்களின் நன்மையின் பொருட்டு அவ் வுயிர்களுடன் தொடர்ந்து நின்று 'புறம் புறம் திரிந்த' செல்வனாகின்றனன்.

(அ. சி.) அமரத்துவம் கடந்து - கூற்றுவனை வென்று. தமரத்து - நாத தத்துவத்தில். துவள் - மயக்கம்.

(7)

2789. மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்
சுத்தம தாகுந் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய1 ஞா னானந்தஞ் சார்ந்தனன் ஞானியே.

(ப. இ.) மத்திமமாகிய உண்ணிலைக் கருவிகளையும் முப்பத்தாறு மெய்களையும் திருவருளால் நாமல்ல என்று உணர்வது தத்துவ உண்மையுணர்தல். அங்ஙனம் உணர்ந்து, அவை சிவனுடைமை, அவன் திருவடிசேரத் துணையாகும்படி அவனால் அருளப்பட்ட கருவிப் பொருள்கள் என்று கைக்கொண்டு ஒழுகுதல் மாற்றுதல் என்பதாகும். அவை அங்ஙனம் மாற்றப்படவே தானே நீங்கும். தூய்மையும் தானே வந்து தலைக்கூடும். செயலறலாகிய துரியத் தூவாமையும் நீங்கும். நீங்கவே கட்டு நீங்கும். இக் கட்டு நீங்கவே சிவமாகித் திகழ்வோம். இயற்கையுண்மை அறிவு இன்பவடிவினைச் சார்வோம். சார்ந்து நாமும் அவ்வாறு நிற்பதனால் பொன்றாப் பேரொளிப் பிழம்பாவோம். இது வாயிலாகவே உண்மை அறிவின்பமாகிய ஓங்குயர் விழுச்சீர்த் திருவடியைப் பாங்குற எய்துவோம். இத்தகைய நிலையே ஞான நிலையாகும். இது பெற்றோனே ஞானியாவன். 'சார்' என்பது ஆகுபெயராகச் சார்வோனைக் குறிக்கின்றது.

(அ. சி.) சத்தியஞான ஆனந்தம் இன்னதென இம் மந்திரம் கூறுகின்றது. மத்திமம் - உண்ணிலைக் கருவிகள். ஆறாறு - 36 தத்துவங்கள். துரியத் துரிசு - துரிய அவத்தை. பெத்தம் அற - பாசம் நீங்க. பிறழ்வுற்று - விளங்கி.

(8)

2790. சிவமா யவமான மும்மலந் தீரப்
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியஞ் சொரூபம தாமே.

(ப. இ.) திருவருளால் சிவனிலை எய்திய ஆருயிர்க்குப் பிறப்பினைத் திரும்பத் திரும்பத் தரும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்


(பாடம்) 1: ஞானாந்தஞ்.