128. பாடவல் லார்நெறி பாட அறிகிலேன் ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன் நாடவல் லார்நெறி நாட அறிகிலேன் தேடவல் லார்நெறி தேடகில் லேனே. (ப. இ.) பாடப்படுதற்குச் சிறந்தாராகிய அம்மையப்பரைப் பாடிப் பணியுநெறி நன்னெறியாகும். அந் நெறிமுறையான் பாடும் அறிவாற்றல் இல்லேன். அதுபோல் வழிபடப்படுதற்குரிய சிவனை வழிபடுதற்கும் அறியேன். அவ்வழிபாட்டின்பின் அச் சிவனை எண்ணத்தின்கண் நாடுமுறைமையும் அறியேன். வேட்கை மிகவினால் உணர்வின்கண் உணர்தலாகிய நிலைமை தேட்டம். தேடப்படுதற்குரிய பெருமையுடையானும் சிவனே. அவனை அம் முறையால் தேடவும் அறியேன். இத் திருமறையின்கண் குறிக்கப்படும் பாடல், ஆடல், நாடல், தேடல் என்னும் நான்கும் முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மைத் திருத்தொண்டின் குறிப்பாகும். இந்நான்மையினைக் குறிக்கும் திருமுறை வருமாறு : 'சீல மின்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங்காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே, (8. ஆனந்தமாலை, 3) இந்நானெறித் தொண்டினை ஒருபுடை ஒப்பாக வைத்துப் பயிற்றுவித்த பண்பினைக் குறிக்கும் திருமுறை வருமாறு : 'நல்ல நந்தன வனப்பணி செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர் புனைபவர் கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர் அல்லு நன்பக லுந்திரு வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள் எல்லை யில்விளக் கெரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர். (12. கணநாதர், 3) இதன்கண் திருமெழுக்கு அமைத்தல் ஈறாகச் சொல்லப்படும் ஐம்பெரும் தொண்டும் சீலமாகும் விளக்கெரித்தல் நோன்பாகும். திருமுறை எழுதுதல் செறிவாகும். திருமுறை வாசித்தல் அறிவாகும். இவ்வெண் பெருந்தொண்டினாலும் சிவபெருமானின் எண் பெருங்குணமும் எளிதின் எய்தும். (2)
|