(ப. இ.) உடையான் மாணிக்கச் செவ்வொளியாய், உடையாள் மரகதப் பச்சொளியாய்க் கலந்து விளங்குவர். அதனால் மாணிக்கத்தினுள்ளே மரகதச் சோதியாய் என்றனர். அம்மையே அப்பனுக்குத் திருமேனியாதலின் மரகத மாடத்துள்ளே மாணிக்கம் என்றனர். ஆருயிர்கட்கு அச்சுப்போல் தாங்கும் தாங்கியாய் நிற்றலின் ஆணிப்பொன் அம்பலத்து ஆடுந் திருக்கூத் தென்றனர். அத் திருக்கூத்தினை உள்ளத்தாற் பேணி, உரையால் வாழ்த்தி, உடம்பால் திருமுறை வழித்தொழுதவர் பெற்ற பெரும் பேற்றினை என்னென்று சொல்வது? இவ்வளவு என்று அளவிட்டுச் சொல்லொணா தென்க. (19) 176. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. (ப. இ.) உலகிற் பிரியாப் பெருநெறி என்பது என்றும் இறவாத இன்ப அன்புநெறி. அதுவே சிவநெறி; செந்நெறி; நன்னெறி; திருநெறி; ஒளிநெறி; வீட்டுநெறி; பொதுநெறி என்க. திருவடியுணர்வு கைவந்த பெருமக்கள் அருளால் அந் நெறியினைப் பெற்றனர். அதன் பயனாக அவர்கள் பிறவாப் பெரும் பேறு பெற்றனர். திருவடியுணர்வே பொரு வருமன்றம். அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறே பேரின்பம். அதனையும் அவர்கள் பெற்றனர். அதனால் அவர்கள் உலகிறந்த ஒருவர் என்றும், உலகுடன் பேசாப் பெருமையரென்றும் உரைபெறுவாராயினர். உரை - புகழ். அம் மெய்யடியார்கள் தேனுண்ட வண்டெனச் சிவன் திருவடியில் நுகரும் இன்பம் உலகிற்குச் சொல்ல ஒண்ணாதென்க. பெருநெறி - திருவடியுணர்வு நெறி. (அ. சி.) பிரியா . . . நெறி - முத்தி. பெற்றார் . . . பெருமையே மதுவுண்ட வண்டுகள்போல் தாம் கண்டு அனுபவிப்பதை விள்ளமுடியாத பெருமை. (20) 177. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல் அருமை எளிமை அறிந்தறி வாரார் ஒருமையுள் ஆமைபோல1 உள்ளைந் தடக்கி இருமையுங்2 கேட்டிருந் தார்புரை அற்றே. (ப. இ.) ஒரு பிறப்பினுள் ஆமையினைப் போன்று தமக்கு இடர் வரும் நெறியில் ஐம்புலனையும் போக விடாது, இடரில் இன்பமே கடலெனப் பெருகும் நன்னெறியிற் போகச் செய்வதே புலனடக்கம் ஆகும். அங்ஙனம் புலனடக்கியவர்களே புலவோராவர். அவர்கள் எம்பிரான் அருளால் அடக்கப்பெருமையின் பயனாகக் கிடைத்தற்கு அரிய பிறவாச் சிறப்பினை எய்துவர். புலனடக்காப் புன்மையோர் அடங்காமையின் பயனாகச் சிறுமையுற்று எளியராய்ப் பிறப்பு இறப்புக்கு உட்படுவர். புரையாகிய ஐம்புலனடக்காக் குற்றமுடையார் பிறப்பும் சிறப்பும் 1. ஒருமையுள். திருக்குறள், 126. 2. ஒரு பிறப்பி. அப்பர், 6. 3 - 5.
|