மனம் எழுச்சி இறுப்பு என்னும் நான்கு. இவ் விருபத்து நான்கினையும் கடந்து உட்புகுந்து உற்றகாலத்துப் பஞ்சு முதலிய ஐவகையால் அழகு செய்யப்பட்ட மெல்லிய பள்ளிக்கட்டிலில் ஆருயிர் தூங்கும். அவ் வுயிர்க் கிழவன் விஞ்சையர் வேந்தன் என்று சொல்லப்படுவன். விஞ்சை - வியத்தகுகருவி. வேந்தன் அக் கருவிகளுக்குத் தலைவன். மெல்லியலாள் - நடுநாடியிற் றங்கி நிற்கும் மெல்லிய உயிர்ப்பு. அவற்றுடன் கூடிக்கொள்ளும் அறி துயில் ஒருங்கிய உறக்கம் என்ப. ஒருங்கிய உறக்கம் எனினும் யோக நித்திரை எனினும் ஒன்றே. இந்நிலையில் ஆணவமலமாகிய நஞ்சு வாய்ப்பு நோக்கிப் பற்றப்பார்த்து உற்றுநிற்கின்றது. அதனை விழுமிய முழுமுதற் சிவபெருமான் எண்ணி நோக்குகின்றான். அவ் வாணவ நஞ்சு கண்டத்துட்படுகின்றது. கண்டம் - இடர். அதன்மேல் அவ் வுயிர்க்குத் திருவடியுணர்வைக் கொடுத்தருளத் திருவுள்ளம் கொள்கின்றனன். இதுவே நயம் செய்வதென்பதாகும். பஞ்சுமுதல் அஞ்சாவன: "சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம் உறுதூவி சேக்கையோ ரைந்து." என்பன. பள்ளியறைச் சிறப்பினைப் பட்டினத்துப்பிள்ளையார் பாடியருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை "புண்ணிய புராதன......" என்று தொடங்கும் பத்தொன்பதாவது பாட்டினுள்ளும், "கருமுதற் றொடங்கி......" என வரும் திருக்கழுமல முன்மணிக்கோவை நான்காவது பாட்டினுள்ளும் வருவனகொண்டு தெளிக. (அ. சி.) அஞ்சொடு நான்கு - அஞ்சு என்று சொல்லப்படுகின்ற எண்ணிக்கைகொண்ட நான்கு வகையான தத்துவங்கள், பூதம்-5; பொறி-5; புலன்-5; தன் மாத்திரை 5. அகம் - அந்தக்கரணங்கள். விஞ்ஞையர் வேந்தன் - சிவன். நஞ்சு - ஆணவமலம். (4) 2234. உரிய நனாத்துரி யத்தி லிவனாம் அரிய துரிய நனாவாதி மூன்றிற் பரிய பரதுரி யத்திற் பரனாந் திரிய வருந்துரி யத்திற் சிவமே. (ப. இ.) துரியம் என்று சொல்லப்படும் அப்பால்நனவில் ஆருயிர் தனித்துநிற்கும். அதனால் இவனாம் என்றருளினர். அப்பால் நனவு: துரியசாக்கிரம். அத்தகைய அருமைவாய்ந்த அப்பால் நனவு, அப்பாற் கனவு, அப்பாலுறக்கம் என்ற மூன்றினுள் பெருமைமிக்க அப்பாலைக் கப்பாலாம் பரதுரியத்தில் பரன் என்று சொல்லப்படும் திருவருளுடன் கூடியுறைபவனாம். இவற்றிற்கெல்லாம் மேம்பட்ட மாறுபாடில்லாத அப்பால் நிலைக்கண் தூய சிவனேயாவன். (அ. சி.) இவனாம் - இவ் வான்மாவாம். பரிய - பெருமையுள்ள. பரனாம் - அருட்சத்தியொடுங் கூடியவனாம். திரியவருந் துரியம் - பரதுரியாதீதம். (5) 2235. பரமாம் அதீதமே பற்றறப் பற்ற பரமாம் அதீதம் பயிலப் பயில பரமாம் அதீதம் பயிலாத் தபோதனர் பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.
|