66
 

(ப. இ.) 'அயல் வழக்கின் துறைவெல்லும் அசைவில் செந்தமிழ் வழக்கே' திருவடியுணர்வைக் கூட்டுவிக்கும் அருள் வழக்காகும். அத்தமிழ் வழங்கும் நாடே சிவனடி சேர்ப்பிக்கும் நற்றவம் புரிதற்கேற்ற பழ நாடாகும். இந் நாட்டகத்துத் தோன்றி முன்னமே நன்னெறி நான்மை நற்றவத்தினை முயன்று செய்கிலாதவர் பின்னும் பிறப்பெடுத்துத் துன்புறுவர். என்னே அவர்தம் பேதைமை. சிவபெருமான் என்னை நன்றாகப் படைத்தருளினன். தன்னை ஏனையார் திரிபின்றி உள்ளவாறு உணர்ந்து உய்தற்குக் கருவியாகிய செந்தமிழ்த் திருமுறையினை ஓதி வழிபடுதல் வேண்டும் எனத் திருவுள்ளங் கொண்டனன் சிவன். அத்தகைய தமிழ் அருள் நூலை அடியேனைக் கொண்டு பாடுவிக்கவும் எண்ணினன். அங்ஙனமே என்னைத் 'தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு' இருத்தியருளினன். தமிழ் பரப்பியவர் ஆளுடைய பிள்ளையார்; தமிழ் உகந்தவர் சிவபெருமான்.

(18)

153. பெற்றமும் மானும் மழுவும்1 பிறிவற்ற
தற்பரன் கற்பனை யாகுஞ் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அறித் தான்எங்கள் நந்தியே.

(ப. இ.) பெற்றமாகிய ஆனேறும் மானும் மழுவும் பூண்டது திருவருளோடும் ஆருயிரோடும் அனைத்துலகோடும் பிரிவற்றுப் பின்னலாய் நின்றருளும் சிவபெருமானின் திருவாணையாகும். தற்பரன் - தானே முழு முதலாய்நிற்கும் சிவன். கற்பனை - கட்டளை; திருவாணை. ஆனேறு, அறத்தின் குறிப்பாகும். மான், செந்தமிழ்மறை முறைகளின் குறிப்பாகும். மழு, திருவாணையின் குறிப்பாகும். இம் மூன்றும் ஒரு புடையாக உள்ளம் உரை உடல் எனக் கொள்ளலுமாம். மேலும் இவை திருவடிதலைக் கூட்டும் அறமும், அவ்வறத்தினை அறிவூட்டும் செறிதமிழ்மறை முறையாகிய மெய்ந்நூலும், அந் நூலின் வழி ஒழுகுவதற்கு உறுதுணையாகிய படைப்பு காப்பு துடைப்பு ஆகிய முத்தொழில் ஆணையும் குறிப்பனவாகும். மழுவாகிய முத்தலைவேல் மேற்குறித்த திருவாணைக் குறிப்பேயாகும். இதனால், அறத்தைச் செலுத்துபவனும், மறையின் ஒலிக்குள் ஒலியாய் நிற்பவனும், அயன் அரி அரன் என்னும் மூவர்க்கும் திருவாணை அருள்பவனும் சிவனே என்பது தெளிவாகும். இயங்குதிணை நிலத்திணை என்னும் இருவேறுயிர்களின் மெய்ம்மையினையும் உணர்த்தியருளினன். அடியேன் முடியின்மீது தன் திருவடியினையும் சூட்டியருளினன். அவன் எங்கள் நந்திக் கடவுளாகிய சிவனே.

(19)

154. ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

(ப. இ.) ஞேயமாகிய அறியப்படும் பொருளையும், ஞானமாகிய அறிவையும், ஞாதுருவாகிய அறிவோனையும், உணர்வு மெய்யாகிய தூவா


1. தூமதி. 11. பட்டினத்துப் பிள்ளையார், ஒருபா - 6.